shadow

சென்னையில் தினகரன். நாஞ்சில் சம்பத்தை தவிர பார்க்க ஆளில்லாத பரிதாபம்

டெல்லி குற்றப்பிரிவு காவல்துறையினரால் சென்னைக்கு அழைத்து வரப்பட்ட டிடிவி தினகரன், அடுத்த கட்ட விசாரணைக்காக பெசன்ட் நகரில் உள்ள மத்திய அரசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

இரட்டை இலை சின்னத்தை பெற்றுத் தர லஞ்சம் வாங்கியதாக டெல்லியில் சுகேஷ் சந்திரா என்பவர் டெல்லி குற்றப்பிரிவு போலீசாரால் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் டிடிவி தினகரனிடம் 3 நாட்கள் விசாரணை நடத்திய டெல்லி போலிசார், நேற்று முன் தினம் நள்ளிரவில் அவரையும் அவரது நண்பர் மல்லிகார்ஜுனாவையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்

இதனையடுத்து நீதிமன்றத்தின் உத்தரவின்படி 5 நாட்கள் தினகரனை காவலில் எடுத்த டெல்லி போலீஸார் இன்று மதியம் 1 மணியளவில் விமானம் மூலம் சென்னைக்கு விசாரணைக்காக அழைந்து வந்தனர். சென்னை விமான நிலையத்திலிருந்து நேராக பெசன்ட் நகரில் உள்ள மத்திய அரசு விடுதிக்கு இருவரும் அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த விடுதியில் இருவரிடமும் இரண்டு நாட்கள் விசாரணை நடைபெறும் என்று கூறப்படுகிறது.

சென்னையில் விசாரணை முடிந்த பின்னர் அடுத்தகட்டமாக தினகரன், பெங்களூருவில் உள்ள அவரது நண்பர் மல்லிகார்ஜுனாவின் வீட்டிக்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரிக்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது. சென்னைக்கு அழைத்து வரப்பட்ட தினகரனை பார்ப்பதற்கு நாஞ்சில் சம்பத்தை தவிர்த்து வேறு எந்த ஆளுங்கட்சி பிரமுகர்களும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply