shadow

மோடியின் அழைப்பை ஏற்று இந்தியா வருகிறார் டிரம்ப் மகள்

பாரத பிரதமர் நரேந்திர மோடியின் டுவிட்டருக்கு பதிலளித்து, சர்வதேச தொழில் முனைவோர் மாநாட்டிற்கு தனது மகள் இவான்கா கலந்து கொள்வார் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

ஐதராபாத்தில் ஆகஸ்ட் 28ஆம் தேதி, சர்வதேச தொழில் முனைவோர் மாநாடு நடைபெறுகிறது. இதில் பல்வேறு நாட்டு தொழிலதிபர்கள் பங்கேற்கின்றனர். இதுகுறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், இந்தியாவில் நடைபெறும் சர்வதேச தொழில் முனைவோர் மாநாட்டிற்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்கின்றனர்.

அதற்கு தனது மகள் இவான்கா தலைமை வகிப்பார் என்றும் கூறியுள்ளார். இதன் மூலம் சர்வதேச அளவில் தொழில்முனைவோர்களில் பெண்களை வரவேற்க இயலும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து இவான்கா தனது டுவிட்டரில் இந்தியாவில் நடைபெறும் தொழில் முனைவோர் மாநாட்டில் பங்கேற்பது பெருமை கொள்ளும் தருணம் என்றும், பிரதமர் மோடியையும், உலகளாவிய தொழிலதிபர்களையும் சந்திப்பது சிறப்பானது என்றும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து டிரம்ப் மற்றும் இவான்காவின் டுவீட்களை மோடி ரீ டிவிட் செய்துள்ளார். கடந்த ஜூன் மாதம் வாஷிங்டன் சென்ற பிரதமர் மோடி, இவான்காவை இந்தியாவிற்கு வரவேற்றார்.

அதன் பின்னர் டிவிட்டரில் பதிவிட்ட இவான்கா, இந்தியாவில் நடைபெறும் சர்வதேச தொழில் முனைவோர் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தமைக்கு பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார். இந்த மாநாட்டிற்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகமும், நிதி ஆயோக்கும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.

Leave a Reply