shadow

வாய்க்கு வந்தபடி புளுகுவதில் ஹிலாரி வல்லவர். டொனால்ட் டிரம்ப்
donald
அமெரிக்காவில் அடுத்த வருடம் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இப்போதே தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. குறிப்பாக குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் ஆகிய இருவரும் ஒருவர் மீது ஒருவர் பரபரப்பான குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்றனர்.

‘இஸ்லாமியர்களை அமெரிக்காவுக்குள் நுழைய அனுமதிக்க கூடாது’ என சில நாட்களுக்கு முன்னர் டொனால்ட் டிரம்ப் கூறிய கருத்துக்கு கண்டனம் தெரிவித்த ஹிலாரி கிளிண்டன் கூறியதாவது, ” ஆவேசப்பட வைக்கும் வகையிலும், எரிச்சலடைய வைக்கும் வகையிலும் பேசி, மிக சிரமமான கேள்விகளுக்கு எளிதான விடைகள் இருப்பதைப்போல் மக்களை நினைக்க வைப்பதில் டொனால்ட் டிரம்ப் வல்லவர். ஆனால், பிரச்சனைகளை கையாளும் முறை இதுவல்ல. நாம் சந்தித்துவரும் அச்சுறுத்தல்களை ஒருமைப்பாட்டுடன் இணைந்து எதிர்கொள்ள வேண்டும். நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளில் சந்தேகப்படும்படியாக ஏதுமிருந்தால் அதைப்பற்றி பிறருக்கு தெரிவிக்கும் வகையில் நாம் கண்காணிப்புடன் இருக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் ஹிலாரி கிளிண்டன் மீது சரமாரியாக டொனால்ட் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார். நேற்று டொனால்ட் டிரம்ப் ஒரு பேட்டியில் கூறியபோது:-

எனது பேச்சுக்கள் வலிமையையும், கண்டிப்பையும் உணர்த்தியுள்ளதாகவே நான் கருதுகிறேன். ஹிலாரி பலவீனமானவர். அவரிடம் ஒன்றுமில்லை. நமது நாட்டுக்கு அதிக வலிமையும், ஆற்றலும் மிக்க அதிபர் தேவை. தற்போது இருப்பதுபோல் (ஒபாமா) பலவீனமான, மோசமான அதிபர் நமக்கு இனியும் தேவை இல்லை.

அளவில்லாத அறிவாற்றல், வசீகரம், தந்திரம், வலிமை மற்றும் பேராற்றல் கொண்டவர்தான் அடுத்த அதிபராக வரவேண்டும் என நான் விரும்புகிறேன். ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு ஆள்சேர்க்கும் ஏஜெண்ட்டாக நான் செயல்படுவதாக கூறும் ஹிலாரியின் வாதத்தை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அது ஹிலாரி பாணியில் அவர் வெளியிட்டுள்ள புதியபொய், அவ்வளவுதான். எல்லாவற்றையும்பற்றி வாய்க்கு வந்தபடி புளுகுவதில் ஹிலாரி வல்லவர் என்பது நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரியும்.

இந்த நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரியாக இருந்தபோது ஏராளமான நாடுகளுக்கு ஹிலாரி பயணம் செய்தார். ஆனால், அவரது வேலையை அவர் செய்யவில்லை. ஏனெனில், ஒட்டுமொத்த உலகமும் அவரை எதிர்த்தது. எனவே, ஏராளமான நேரத்தையும், ஆற்றலையும், பணத்தையும் அவர் விரயப்படுத்தினார். உண்மையை சொல்லப் போனால் ஏராளமான உயிர்களையும்கூட அவர் வீணடித்தார்.

அவரது கொள்கைகள் பயங்கரமானவையாக அமைந்ததால் அதன் விளைவுகள் பேரழிவாக அமைந்தது. ஹிலாரியைச் சுற்றி மத்திய கிழக்கு நாடுகள் கொதிதெழுந்து வெடித்தன. ஹிலாரியின் தவறான முடிவுகளால் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் என்னை மதிக்கிறார். என்னை அறிவாளி என்று அவர் புகழ்ந்திருப்பதை இந்த நாட்டின் சார்பாக ஏற்றுக் கொள்கிறேன். ஏனெனில், ரஷியாவுடன் நாம் நட்புறவாக இருந்தால் அது ஆக்கப்பூர்வமாகவே அமையும். அழிவுப்பாதையாக இருக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.

English Summary: Trump on Clinton: She lies like crazy

Leave a Reply