shadow

நீட் அவசர சட்டத்திற்கு திடீர் சிக்கலா? மாணவர்கள் கலக்கம்

நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கும் அவசரச் சட்டம் குறித்து, மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் திடீரென எதிர்மறை கருத்துகளைத் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளதால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு இந்த ஆண்டு மட்டும் விலக்கு அளிக்கும் அவசரச் சட்டத்திற்கு ஒப்புதல் பெற, தமிழக அரசு தீவிர முயற்சிகள் செய்து வருகிறது.

இந்த நிலையில் தமிழக அரசின் அவசரச் சட்டத்தை எதிர்த்து, நீட் ஆதரவு மாணவர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் நளினி சிதம்பரம் சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்துள்ளார். அதில், நீட் தேர்வின் அடிப்படையில் தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கையை உடனடியாகத் தொடங்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், தமிழகத்தில் மருத்துவக் கலந்தாய்வை ஆகஸ்ட் 22-ம் தேதி அதாவது இன்று வரை நடத்த இடைக்காலத் தடை விதித்து உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த நிலையில் இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வருகிறது.

இந்நிலையில், நீட் தேர்விலிருந்து விலக்கு பெறும் வகையில் தமிழக அரசு கொண்டுவந்துள்ள அவசரச் சட்டம், சட்டரீதியாக வலுவானது இல்லை என்று மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் கருத்து தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கும் தமிழகத்தின் கோரிக்கை ஏற்கப்பட்டால், அதேபோன்றதொரு கோரிக்கை மற்ற மாநிலங்களிடமிருந்தும் வரலாம் என்றும் அவர் கூறியுள்ளதாக தெரிகிறது. இந்த தகவல் தமிழக மாணவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Leave a Reply