shadow

வெள்ளை மாளிகையில் நுழைய தகுதியற்றவர் டொனால்ட் டிரம்ப். ஒபாமா

obamaஅமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 8ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் அதிபர் தேர்தல் வேட்பாளர்களான ஹிலாரி கிளிண்டன் மற்றும் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஹிலாரிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வரும் அமெரிக்க அதிபர் ஒபாமா, வெள்ளை மாளிகையில் நுழைவதற்கும், அதிபர் பதவியை ஏற்பதற்கும் டொனால்ட் தகுதியற்றவர் என்று கூறியுள்ளார்.

நேற்று அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் ஒன்றாகிய பிலடெல்பியாவில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது ஒபாமா பேசியதாவது:

வெள்ளை மாளிகையில் எனக்குப் பிறகு ஹிலாரி கிளிண்டன் அமர்வது தான் அமெரிக்காவுக்கு நல்லது. நமது ஜனநாயகத்தின் மீது அக்கறை கொண்டவர்கள் ஹிலாரி கிளிண்டனுக்குப் பக்கபலமாக இருக்க வேண்டும். ஜனநாயகமும், அதிபர் பதவிக்கான தேர்தலும் ரியாலிட்டி ‘டிவி’ நிகழ்ச்சியோ, பார்வையாளர்கள் விளையாடும் விளையாட்டோ அல்ல.

ஆமாம், அவரால் முடியும் என்பது அமெரிக்கா அல்ல. நம்மால் முடியும். நம்மால் கூடுதல் வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும். சிறந்த பள்ளிகளை உருவாக்க முடியும். பாதுகாப்பான சாலை களை உருவாக்க முடியும். பாதுகாப்பு நிறைந்த உலகத்தை உருவாக்க முடியும் என்பது தான் அமெரிக்கா. உண்மையான மாற்றத்தையும், வளர்ச்சியையும் நாம் கொண்டு வரவேண்டும்.

இந்தப் பணிகளை எனக்குப் பின் ஹிலாரி சிறப்பாக செய்து முடிப்பார். எனவே தான் நான் அவருக்கு ஆதரவாக இருக்கிறேன்.

டிரம்ப் எவ்வித திட்டமும் இல்லாதவர். தன்னை ஒரு தொழிலதிபர் என அழைத்துக் கொள்பவர். அமெரிக்காவில் ஏற்கெனவே ஏராளமான தொழிலதிபர்கள் இருக்கிறார்கள். அதனால், அவரைப் போன்றவர் நமக்குத் தேவையில்லை. சொல்லப் போனால் பல தொழிலதிபர்கள் வரி ஏய்ப்பு செய்வதும், ஊழியர்களுக்கு முறையாக சம்பளம் வழங்காமலும் ஏமாற்றும் பேர் வழிகளாகத்தான் இருக்கின்றனர்.

உழைப்பாளிகள் பற்றி கடந்த 70 ஆண்டுகளாக எந்த கவலையும் இல்லாத டிரம்ப் திடீரென ஒருநாள் மக்களின் சாம்பியனாக பார்க்கிறார். இதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும். வெள்ளை மாளிகைக்குள் நுழைய அவர் சிறிதும் தகுதியற்றவர். எனவே மக்கள் தேர்தலில் சிந்தித்து செயல்பட வேண்டும்.

இவ்வாறு ஒபாமா பேசினார்.

Leave a Reply