shadow

பார்த்தசாரதி கோயில் (பெருமாள் கோயில்) 8ஆம் நூற்றாண்டின் இந்து வைஷ்ணவக் கோயில்களில் ஒன்றாகும். வைணவர்களின் 108 திவ்விய தேசங்களில் ஒன்றான, கோயில் கோபுரங்களும் மண்டபங்களும், நுட்பமான சிற்பக் கலைகளும் நிறைந்த இக்கோவில் சென்னையில் உள்ள திருவல்லிக்கேணியில் உள்ளது. இத்தலத்து எம்பெருமான் மகாபாரதப் போரின்போது பார்த்தனுக்கு (அர்ஜுனன்) தேரோட்டிய (சாரதி) வடிவில் காட்சி அளிக்கிறார். இத்தலத்து மூலவரின் பெயர் வேங்கட கிருஷ்ணர் என்ற போதிலும் உற்சவராகிய பார்த்தசாரதியின் பெயரிலே புகழப்பெற்றுள்ளது
கோவில் அமைப்பு:
கருவறையில் மூலவர் வேங்கட கிருஷ்ணர் தவிர ருக்மிணி பிராட்டி, பலராமன், சத்யகி, அனிருத்தன், பிரத்யும்னன் என குடும்ப சமேதராக காட்சித்தருகிறார். இவர்கள் தவிர பிற சன்னதிகளில் ஸ்ரீ வேதவல்லி தாயார், ஸ்ரீ மன்னாதர் (ரங்கநாதர், ஸ்ரீ ராமர், ஸ்ரீ கரிவரதர் (வரதராஜர் சுவாமி), துலசிங்கப் பெருமாள் (நரசிம்மர்), ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீ ஆஞ்சநேயர், ஆழ்வார்கள், ராமானுஜர் , மணவாள மாமுனிகள் மற்றும் வேதாந்தாசாரியர் ஆகியோரும் காட்சித்தருகின்றனர். இங்கே பார்த்தசாரதி மற்றும் நரசிம்மருக்கு தனித்தனியே கொடி மரங்கள் மற்றும் வாசல்கள் கொண்டு தனித்தனி கோயில்கள் போல் திகழ்கின்றன. இங்கே கோபுரங்களும் மண்டபங்களும் தென்னிந்தியக் கோவில் கட்டிட கலைக்கே உரிய நுட்பமான சிற்பக் கலையால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
புராணச்சிறப்பு:
பெருமாள் வேங்கடேஷ்வரர் அரசன் சுமதிக்கு பார்த்தசாரதியாக காட்சி அளிப்பதாக வாக்கு தந்திருந்தார். அவ்வாக்கை நிறைவேற்றும் வகையில் அவர் பார்த்தசாரதியாக அவருக்கு திருவல்லிக்கேணியில் காட்சி அளித்தார். மூலவர் பார்த்தசாரதியின் விக்கிரகத்தை அகத்திய மாமுனிவர் பிரதிஷ்டை செய்ததாக (நிறுவியதாக) கருதப்படுகிறது. இங்கே ஸ்ரீ வைணவ ஆச்சாரியாரான ஸ்ரீ ராமானுஜரின் பெற்றோர்கள் பெருமாளை குழந்தை செல்வத்திற்க்காக வேண்டியதாக சொல்லப்படுகிறது. இக்கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் பெருமாள் பார்த்தசாரதியே அவர்களுக்கு மகனாக பிறந்ததாக நம்பப்படுகிறது.

ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி பெருமை:
மகாபாரதத்தின்படி, கிருஷ்ண பகவான், மகாபாரத போரின்போது அர்ஜுனனின் தேரோட்டியாக இருந்தார். அச்சமயத்தில் அவர் இந்துக்களின் புனித நூலான ஸ்ரீமத் பகவத் கீதையை தந்தார். போரின்போது பீஷ்மரின் அம்புகளால் காயமடைந்த கிருஷ்ணர் முகம் முழுவதும் தழும்புகளுடன் காட்சி அளிக்கிறார். இக்கடவுளுக்கு இன்னொரு சிறப்பு என்னவென்றால் இந்த இடத்தில் மட்டும் தான் கிருஷ்ண பகவான் மீசையுடனும், தன் பிரதான ஆயுதமான சுதர்சன சக்கரம் இல்லாமலும் காட்சி தருகிறார். போரின் தொடக்கத்தில் இவர் எந்த ஆயுதமும் ஏந்தாமல் இருப்பதாக வாக்கு கொடுத்ததால் போரின் தொடக்கம் மற்றும் முடிவினை தெரிவிக்கும் சங்கத்தை மட்டும் ஏந்தியுள்ளார். இங்கு உற்சவ மூர்த்தி தன் கதாயுதம் இல்லாமல் செங்கோலுடன் காட்சி தருகிறார்.

நாலாயிரப் பிரபந்தத்தில் திருவல்லிக்கேணி:
நாலாயிர திவ்யப் பிரபந்தத்திலிருந்து திருவல்லிக்கேணியை சுட்டிக்காட்டிப் பாடப்பட்ட ஒரு பாசுரம்:

வேதத்தை வேதத்தின் சுவைப்பயனை விழுமிய முனிவர் விழுங்கும்
கோது இல் இன் கனியை நந்தனார் களிற்றை குவலயத்தார் தொழுதேத்தும்
ஆதியை அமுதை என்னை ஆளுடை அப்பனை ஒப்பவரில்லா
மாதர்கள் வாழும் மாடமாமயிலைத் திரு அல்லிக்கேணி கண்டேனே.

பிரசாதம்:
பெரும்பாலான நாட்களன்று இங்கு சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, தயிர் சாதம் மற்றும் வடை வழங்கப்படுகிறது. வைகுந்த ஏகாதசி சமயத்தில் (பகல் பத்து / இராப் பத்து) ஒருநாள் பகவானுக்கு திருப்பதி வேங்கடாசலபதியை போல அலங்காரம் செய்யப்படுகிறது, அன்று மட்டும் திருப்பதி லட்டு இங்கு வழங்கப்படுகிறது.

தரிசனம், சேவைகள் மற்றும் உற்சவங்கள்:
இக்கோவிலில் தென்கலை வைணவ பாரம்பரியமும் வைகம ஆகம முறையும் கடைப்பிடிக்கப்படுகிறது. இங்கு சித்திரைத் திங்களின் போது ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமிக்கும் ஆனி மாதத்தில் ஸ்ரீ அழகியசிங்கருக்கும் பெரிய அளவில் பிரம்மோற்சவங்கள் நடைபெறுகின்றன. அதனுடன் ஸ்ரீ ராமானுஜர் (ஏப்ரல்/ மே), ஸ்ரீ மணவாளமாமுனிகள் மற்றும் மற்ற ஆழ்வார்களுக்கும் ஆச்சாரியர்களுக்கும் பிரம்மாண்ட அளவில் உற்சவங்கள் நடைபெறுகின்றன. வைகுண்ட ஏகாதசி மற்றும் சித்திரை திங்களின் போது இங்கு ஏராளமான பக்தர்கள் குவிகின்றனர். இச்சமயத்தில் இங்கு உள்ள மண்டபங்களில் நிறைய கதா காலக்ஷேபங்கள் (புராண கதை சொல்லுதல்) நடைபெறுகின்றன.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *