shadow

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதவி விலக கோரி டிராபிக் ராமசாமி சுற்றுப்பயணம்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் இரண்டு 2 அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு இருப்பதால் அவர்கள் தங்கள் பதவியில் இருந்து விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய உள்ளதாக சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தெரிவித்தார்.

மக்கள் பாதுகாப்புக் கழகம் சார்பில், ஊழல் புகாரில் சிக்கிய அமைச்சர்கள் பதவி விலக வலியுறுத்தி சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு அந்த அமைப்பின் நிறுவனத் தலைவரும், சமூக ஆர்வலருமான டிராபிக் ராமசாமி தலைமை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் டிராபிக் ராமசாமி பேசியதாவது: முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள் விஜயபாஸ்கர், காமராஜ் ஆகியோர் மீது ஊழல் குற்றச்சாட்டு புகாரின்பேரில் எப்ஐஆர் பதிவு செய்து விசாரிக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே, அவர்கள் பதவி விலக வேண்டும். இதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன். கொள்ளையடிக்கும் அரசாக தமிழக அரசு திகழ்கிறது. இதற்கு மத்திய அரசு உதவி வருகிறது.

ஆங்கிலேயர்களுக்கு எதிராக 1942-ம் ஆண்டு ஆகஸ்ட் 8-ம் தேதி ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கம் நடத்தப்பட்டது. அந்த நாளான இன்று நாங்கள் கொள்ளையனே வெளியேறு என்ற போராட்டத்தைத் தொடங்கியுள்ளோம். தமிழகத்துக்கு நிரந்தர ஆளுநரை நியமித்து ஊழலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply