shadow
மு.க.ஸ்டாலினுடன் டிராபிக் ராமசாமி சந்திப்பு. ஜெ.வை எதிர்க்கும் பொதுவேட்பாளரா?
trafficசென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட இருக்கும் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எதிராக வேட்பாளரை களம் இறக்குவதில் இன்னும் எதிர்க்கட்சிகளுக்குள் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. இந்த இடைத்தேர்தலில் திமுக, விடுதலை சிறுத்தைகள் மற்றும் தமாக ஆகிய கட்சிகள் புறக்கணிக்க உள்ளதாக ஏற்கனவே அறிவித்துவிட்டது. மேலும் பாமக, காங்கிரஸ், பாஜக, மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகள் இன்னும் சில நாட்களில் தங்கள் முடிவைதெரிவிக்க உள்ளன.
இந்நிலையில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெயலலிதாவுக்கு எதிராக போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். தேர்தலில் போட்டியிடும் முடிவை அறிவித்த கையோடு, களத்தில் நிற்காத அரசியல் கட்சிகளின் ஆதரவை பெறும் முயற்சியிலும் தற்போது தீவிரமாக இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
முதல்கட்டமாக இன்று தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலினை தேனாம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசியுள்ளார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டிராபிக் ராமசாமி, ஊழல்மிக்க ஆட்சியை ஒழிப்பதற்காகவே ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட முடிவு செய்ததாக தெரிவித்தார். தி.மு.க. தலைவர் கருணாநிதியுடன் ஆலோசித்த பிறகே இந்த இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு? என்பது முடிவு செய்யப்படும் என மு.க.ஸ்டாலின் கூறியதாக தெரிகிறது.
மேலும் தி.மு.க. தலைவர் கருணாநிதி, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், ராமதாஸ், விஜயகாந்த் ஆகியோரையும் டிராபிக் ராமசாமி சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும், ஜெயலலிதாவை எதிர்க்கும் தன்னை எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளாராக நிறுத்த கோரியும் அவர் அனைத்து தலைவர்களையும் சந்திக்க திட்டமிட்டுள்ளார் என கூறப்படுகிறது.

Leave a Reply