shadow

tollgateசுங்கச்சாவடிகளில் பஸ், கார்களுக்கு விதிக்கப்படும் சுங்க வரியை விரைவில் ரத்து செய்ய மத்திய அரசு அதிரடியாக முடிவு செய்து உள்ளது. இந்த முடிவை பொதுமக்கள் பெரிதும் வரவேற்றுள்ளனர்.

நாடு முழுவதிலும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் பஸ், கார், ஜீப், வேன் மற்றும் அனைத்து வர்த்தக வாகனங்களுக்கும் சுங்க வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆனால் சுங்கவரி வசூலிப்பவர்கள் தங்களுக்குரிய பகுதிகளில் உள்ள சாலையை சரிவர பராமரிப்பு செய்வதில்லை. இதுகுறித்து மத்திய அரசுக்கு ஏராளமான புகார்கள் கூறப்பட்டு வந்தன.

மேலும் தாங்கள் குடியிருக்கும் வீடுகளுக்கு செல்வதற்குகூட பொதுமக்களிடம் இருந்து சுங்க வரி வசூலிக்கப்பட்டதாக பரவலான குற்றச்சாட்டு எழுந்து வந்தது. சுங்கச்சாவடிகளில் பெறப்படும் மொத்த வருவாயில் 14 சதவீதம் மட்டுமே மத்திய அரசுக்கு கிடைத்து வருகிறது. இது, அண்மையில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நாடு முழுவதும் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

எனவே சுங்கவரியை ரத்து செய்ய நிதின் கட்காரி தலைமையிலான மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் அதிரடியாக முடிவு செய்துள்ளது. இதற்கான பரிந்துரை அறிக்கை ஒன்று சாலைப் போக்குவரத்து அமைச்சகம் பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பியுள்ளது. இதன்படி இனிமேல் பேருந்து மற்றும், தனியார் வாகனங்களான கார், ஜீப் போன்றவற்றுக்கு விதிக்கப்படும் சுங்கவரி அடியோடு ரத்து செய்யப்படும் என்றும் இனி வர்த்தக ரீதியிலான வாகனங்களுக்கு மட்டுமே சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இதன்மூலம் வரும் ஐந்தாண்டுகளீல் மத்திய அரசுக்கு சுமார் 26 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்றும் இருப்பினும் பொதுமக்களின் நன்மையை கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply