shadow

blood-pressure1-350x250

இன்று முக்கியமான நாள்…! யாருக்கு தெரியுமா? டென்ஷன் பேர்வழிகளுக்கு. ஆம், ரத்த அழுத்த நாள். 60 வயதுக்கு மேல் தான் வரும் பிபீ என்று சொல்லப்படும் ஹைபர்டென்ஷன் நோய், இளைய வயதிலேயே வர ஆரம்பித்து விட்டது. காரணம், டென்ஷன். படிக்க டென்ஷன், படித்தால் வேலையில்லையே என டென்ஷன், வேலையில் சேர்ந்தால் சம்பளம் டென்ஷன்; பதவி டென்ஷன், ஆபீசில் டென்ஷன், வீடு திரும்பினால் டென்ஷன். சாப்பிட்டால் டென்ஷன்; பேசினாலும் பேசாவிட்டாலும் டென்ஷன், பிள்ளைகள் படித்தாலும் டென்ஷன், படிக்காவிட்டாலும் டென்ஷன், வாடகை தர டென்ஷன், வீடு வாங்குவதில் டென்ஷன்… இப்படி ஆண்களுக்கு மட்டுமின்றி, பெண்களுக்கும், ஏன் பள்ளி செல்லும் பிள்ளைகளுக்கும் கூட டென்ஷன். இன்னொரு பக்கம், பீட்சா, பர்கரில் ஆரம்பித்து உணவு மற்றும் மது, சிகரெட் போன்ற பழக்க வழக்கங்கள் வேறு அதிகமாக பரவி வருகிறது.

இவற்றால் பெரும்பாலும் 35 வயதுக்குள் உள்ள ஆண், பெண்களுக்கு தான் சிக்கல். ஆண்களுக்கு மட்டுமே இருந்த பழக்கங்கள், இப்போது பெண்களையும் தொற்றிக்கொள்ள ஆரம்பித்து விட்டதால் தான் அவர்களுக்கும் பிபீ பிடித்துப் போய்விட்டது. பெண்களுக்கு பாதிப்பு வந்தால் அவர்களை மட்டுமல்ல, அவர்கள் தாயாகும் போது, அவர்கள் வயிற்றில் வளரும் பிஞ்சு சிசுவையும் பாதிக்கிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல வீடுகளில் குழந்தைகள் கண்ணுக்கு கண்ணாடி அணியும் நிலை, அவர்களின் பெற்றோரால் தான் ஏற்படுகிறது என்பது போல, பிபீயும் வாரிசை பல வகையில் தொற்றுகிறது என்பது நிபுணர்கள் கருத்து. பிபீ என்பது வழக்கமாக எல்லாருக்கும் 120/80 என்ற அளவில் இருக்க வேண்டும்.

இந்த அளவுக்குள் இருந்தாலே, கட்டுப்படுத்தி வந்தாலே பிரச்னை வராது; ஆனால், கர்ப்பிணி பெண்களுக்கு அவர்கள் கருவுற்ற 20 வாரங்களிலோ, அல்லது கருவுறுவதற்கு முன்போ 140/90 என்று வந்து விட்டால் கண்டிப்பாக டாக்டரை பார்க்க வேண்டும். இதில் போதிய விழிப்புணர்வு இன்னும் பல பெண்களிடம் ஏற்படவில்லை. இப்படிப்பட்ட பெண்களில் 25 முதல் 30 சதவீதம் பேருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு இருதய பாதிப்பு எந்த வகையிலாவது ஏற்பட வாய்ப்பு அதிகம். அதனால் விழிப்போடு இருப்பது நல்லது என்பது டாக்டர்கள் அறிவுரை. பெண்கள் பொதுவாகவே, உணவுகளில் அதிக பழங்கள் சேர்க்க வேண்டும். பதப்படுத்தப்பட்ட, பாக்கெட் உணவுகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். ரத்த அழுத்தம் – இளம் வயதிலேயே ஒதுக்கி வைக்கலாம்; நாம் சில உணவு, பழக்க வழக்கங்களில் ஒதுங்கி இருந்தால்…!

Leave a Reply