shadow

8திருச்சி என்ஐடி (தேசிய தொழில்நுட்பக் கழகம்) பொன்விழா கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று திருச்சி வருகிறார்.

இன்று காலை திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் முடித்துவிட்டு தனி விமானம் மூலம் திருச்சி வரும் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு தமிழக கவர்னர் ரோசய்யா சிறப்பான வரவேற்பு அளிப்பார்.

திருச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் தஞ்சை செல்லும் ஜனாதிபதி அங்கிருந்து  கார் மூலம் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்கிறார். மீண்டும் திருச்சி திரும்பும் ஜனாதிபதி சிறிது நேரம் ஓய்வு எடுத்துவிட்டு திருச்சி என்.ஐ.டி பொன்விழா கொண்டாட்டத்தில் கலந்து கொள்கிறார். பின்னர் திருச்சி விமான நிலையத்தில் இருந்து தனிவிமானம் மூலம் டெல்லி திரும்புகிறார்.

ஜனாதிபதியின் வருகையையொட்டி, ஏடிஜிபி ராஜேந்திரன், மத்திய மண்டல ஐ.ஜி. மு.ராமசுப்பிரமணி, மாநகரக் காவல் ஆணையர் சைலேஷ்குமார் யாதவ் ஆகியோர் தலைமையில், 5 எஸ்.பி.க்கள், 6 ஏ.எஸ்.பி.க்கள் உள்ளிட்ட 1500-க்கும் மேற்பட்டோர் போலீஸார் பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனிக்கும் பொறுப்பில் ஈடுபட்டுள்ளனர்.

திருச்சி விமான நிலையம் மற்றும் திருச்சி என்.ஐ.டி. வளாகத்தில் போலீஸார் நேற்று வாகன ஒத்திகை நடத்தினர். தற்போது என்.ஐ.டி. வளாகம் முழுவதும் போலீஸார் கட்டுப்பாட்டில் உள்ளது.

இதேபோல் தஞ்சையிலும் ஜனாதிபதியின் வருகையை ஒட்டி விமானப்படை நிலையம், மாரியம்மன் கோயில் மற்றும் வழிநெடுகிலும் என ஏறத்தாழ 1000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

Leave a Reply