shadow

அதிமுகவின் துணை அமைப்புதான் டி.என்.பி.எஸ்.இ. ராமதாஸ் காட்டமான அறிக்கை
ramdoss
சமீபத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் உறுப்பினர்களாக அதிமுகவின் வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்தவர்கள் நியமிக்கப்பட்டனர். இதுகுறித்து கருத்து கூறிய பாமக நிறுவனர் ராமதாஸ் அரசு அமைப்பாக இருந்த டி.என்.பி.எஸ்.இ அமைப்பு தற்போது அதிமுகவின் துணை அமைப்பாக மாற்றப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
 
இதுகுறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:

” தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக இருந்த இடங்களை நிரப்பும் நோக்குடன் 11 புதிய உறுப்பினர்களை தமிழக அரசு நியமித்திருக்கிறது. அவர்கள் அனைவரும் தீவிர அ.தி.மு.க. உறுப்பினர்கள் ஆவர். அரசு ஊழியர்களை தேர்ந்தெடுத்து நியமிப்பதற்கான அரசியல் சட்ட அதிகாரம் கொண்ட ஆணையத்தை அ.தி.மு.க.வின் துணை அமைப்பாக மாற்றும் முயற்சிகள் கண்டிக்கத்தக்கவை.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் தலைவரும், 14 உறுப்பினர்களும் இருக்க வேண்டும். 11 உறுப்பினர் பணியிடங்கள் காலியாக இருந்ததையடுத்து அவற்றை நிரப்புவதற்காக 11 பேரை அரசு நியமித்துள்ளது. அவர்களில் இ.ஆ.ப. அதிகாரி இராஜாராம் உள்ளிட்ட நால்வர் தவிர மீதமுள்ள 7 பேரும் ஆளுங்கட்சி வழக்கறிஞர் அணியைச் சேர்ந்தவர்கள். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் என்ற சட்டப்பூர்வ ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்படும் தார்மீக தகுதி அவர்களுக்கு இல்லை.

புதிய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள இ.ஆ.ப. அதிகாரியான தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளரான மு. இராஜாராம் கரை வேட்டி கட்டாத அ.தி.மு.க. உறுப்பினராவார். செய்தித்துறை செயலர் என்ற முறையில், ஊடக நிர்வாகங்களை கெஞ்சியும், சில நேரங்களில் மிஞ்சியும் ஊடகங்களில் அரசுக்கு எதிரான செய்திகள் வராமல் பார்த்துக் கொண்டதுதான் இவரது சாதனை.

இப்படியாக பணியாளர் தேர்வாணையம் திட்டமிட்டு அ.தி.மு.க. துணை அமைப்பாக மாற்றப்பட்டிருக்கிறது.
தகுதியும் நேர்மையும் இல்லாமல் விசுவாசத்தின் அடிப்படையில் உறுப்பினர்கள் நியமிக்கப்படுவதால் தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் ஊழல் ஆணையமாக மாறி வருகிறது.

லஞ்சம் கொடுத்து பணியில் சேர்பவர்களின் முதன்மை நோக்கம் லஞ்சம் வாங்குவதாகத்தான் இருக்கும் என்பதால் அரசு நிர்வாகத்தில் ஊழல் தலைவிரித்தாடும். எனவே, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு 11 புதிய உறுப்பினர்கள் நியமனத்தை ரத்து செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி, இப்பதவிக்கு தகுதியான ஆட்களை பரிந்துரை செய்வதற்காக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையில் அப்பழுக்கற்ற வரலாறு கொண்ட சமூக ஆர்வலர்களைக் கொண்ட தேர்வுக் குழுவை அமைக்க வேண்டும் ”

இவ்வாறு ராமதாஸ் தன்னுடைய அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply