shadow

நளினி விடுதலை. தமிழக அரசே முடிவு எடுக்கலாம். சென்னை ஐகோர்ட் அதிரடி அறிவிப்பு

nalini1ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை பெற்ற நளினி கடந்த 25 ஆண்டுகளாக சிறையில் தண்டனை அனுபவித்து வரும் நிலையில் தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்று வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில், ராஜிவ் கொலை வழக்கு தொடர்பாக மத்திய அரசு தொடர்ந்துள்ள வழக்கின் தீர்ப்பு வெளியான பின்னர் நளினியின் மனு குறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்கலாம்’ என்று சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.

கடந்த 25 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் தன்னை விடுதலை செய்யவேண்டும் என்று கோரி நளினி சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவில் தன்னை 161வது விதி மூலம் விடுவிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனுவிற்கு தமிழக உள்துறை துணைச் செயலாளர் டேனியல் தேவஆசீர்வாதம் அளித்த பதில் மனுவில், ‘ 20 வருடங்கள் சிறையில் உள்ளவர்களை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்கும் தமிழக அரசின் முடிவு நளினி வழக்கில் பொருந்தாது. இது தொடர்பாக மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. எனவே இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பிக்கும் வரை தமிழக அரசு எந்த முடிவும் எடுக்க முடியாது. எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என கூறப்பட்டிருந்தது.

இந்த மனு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் விளக்கத்தை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், மத்திய அரசு தொடர்ந்த வழக்கு முடிந்த பின்னர், நளினி மனு மீது தமிழக அரசு முடிவு எடுக்கலாம் என்று தெரிவித்து நளினி மனுவை முடித்து வைத்தது.

இதுகுறித்து நளினியின் வழக்கறிஞர் புகழேந்தியை கூறியபோது, “தமிழகத்தில் 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறைத்தண்டனை அனுபவித்துவரும் கைதிகளை விடுதலை செய்யவேண்டும் என 1994 -ம் ஆண்டு இன்றைய முதல்வர் ஆட்சியின்போது அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி தன்னையும் விடுதலை செய்யவேண்டும் என்று நளினி 22. 2 2014 அன்று தமிழக அரசுக்கு மனு அளித்திருந்தார்.

அதன்படி தமிழக அரசு எந்த முடிவும் எடுக்காத காரணத்தால் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகினார். இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதியரசர் சத்தியநாராயணன், ‘உச்ச நீதிமன்றத்தில் ராஜீவ் கொலை வழக்கு தொடர்பாக மத்திய அரசு தொடர்ந்துள்ள வழக்கின் தீர்ப்பு வெளியானபின் நளினியின் மனு குறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்கலாம்’ என்று தெரிவித்திருக்கிறார்” என்று கூறியுள்ளார்.

Leave a Reply