shadow

சென்னை உயர்நீதிமன்றத்தையே ஏமாற்றுகிறது தமிழக அரசு. ராமதாஸ் திடுக்கிடும் குற்றச்சாட்டு
ramdoss statement
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் அனைத்தையும் மூடி, மதுவில்லா தமிழகமாக மாற்ற வேண்டும் என அனைத்து அரசியல் கட்சிகளும், சமூகநல அமைப்புகளும் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் 21 வயதுக்கு குறைவானவர்களுக்கு மது விற்பனை செய்வதில்லை என தமிழக அரசு உறுதி கூறியது. ஆனால் இந்த விதிமுறையை தமிழக அரசு காற்றில் பறக்கவிட்டு சென்னை உயர்நீதிமன்றத்தையே ஏமாற்றி வருவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது: ”தமிழ்நாட்டில் 21 வயதுக்கும் குறைவானவர்களுக்கு மது விற்பனை செய்யப்படுவதில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. போதைக்கு அடிமையானவர்களை அப்பழக்கத்திலிருந்து மீட்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகவும் அரசு கூறியிருக்கிறது.

மது அருந்துவதால் ஏற்படும் தீமைகளை கட்டுப்படுத்துவது தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் அளித்துள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த தமிழக அரசுக்கு ஆணையிடக்கோரி வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. இந்த வழக்கில் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் தான் இத்தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. ஏமாற்றுபவர்களை தண்டிப்பதற்காக தான் நீதிமன்றங்கள் உள்ளன. ஆனால், இந்த விஷயத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தையே ஏமாற்றும் நோக்குடன் முழுக்க முழுக்க உண்மை கலப்பற்ற தகவல்களை தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. இது கண்டிக்கத்தக்கது.

21 வயதுக்கும் குறைவானவர்களுக்கு மது விற்பனை செய்யக்கூடாது என்று சட்டத்தில் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், காலம் காலமாக இந்த விதி காற்றில் பறக்க விடப்படுகிறது. இவ்விதியை கண்டிப்புடன் கடைபிடிக்க அரசுக்கு ஆணையிடக் கோரி வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவை சார்பில் ஏற்கனவே ஒரு வழக்குத் தொடரப்பட்டது. அவ்வழக்கு விசாரணையின்போது, 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மது விற்பனை செய்யக்கூடாது என்ற விதியை அரசு மிகத் தீவிரமாக செயல்படுத்தும்; இதற்கான அறிவிப்பு பலகை அனைத்து மதுக்கடைகளிலும் அமைக்கப்படும்; தேவைப்பட்டால் மது வாங்க வருபவர்களின் வயதை சரி பார்க்க பிறப்புச் சான்றிதழ் கூட கோரப்படும் என்று தமிழக அரசின் சார்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், அந்த வாக்குறுதி காப்பாற்றப்படவில்லை.

21 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு மட்டும் தான் மது விற்பனை செய்ய வேண்டும் என்ற விதி தமிழகத்தில் கடைபிடிக்கப்படவில்லை என்பதற்கு ஏராளமான உதாரணங்களைக் கூற முடியும். 2012 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் திருவாரூர் மாவட்டம் விளமல் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்த மாணவன் மதுக்கடையில் பீர் வாங்கி அதை இடுப்பில் செருகி சென்றபோது பாட்டில் வெடித்து உயிரிழந்தான். அதே ஆண்டு ஜூலை மாதம், மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் உள்ள அரசு பள்ளி ஒன்றின் மாணவர்கள், வகுப்பில் இருந்த பெஞ்சை உடைத்து அதன் பாகங்களை விற்று கிடைத்த பணத்தைக் கொண்டு மது வாங்கி அருந்தியதாக அப்பள்ளியின் தலைமை ஆசிரியரே அதிகாரிகளிடம் புகார் அளித்திருக்கிறார். அண்மைக் கால உதாரணத்தைக் கூற வேண்டுமானால், கடந்த ஜுலை 08 ஆம் தேதி கோவையில் 12-ம் வகுப்பு பயிலும் மாணவி மது குடித்துவிட்டு சாலையில் தகராறு செய்தது நாடு முழுவதும் தலைப்புச் செய்தியானது. இந்த 3 நிகழ்வுகளிலும் சம்பந்தப்பட்டவர்கள் 21 வயதுக்கும் குறைவானவர்கள் தான். அவர்களுக்கு எந்த அடிப்படையில் மது விற்பனை செய்யப்பட்டது என்பதை தமிழக அரசால் விளக்க முடியுமா? இதுபோன்று ஓராயிரம் உதாரணங்களைக் கூற முடியும்.

அதேபோல், தமிழகத்தில் மதுவின் தீமைகள் குறித்த விழிப்புணர்ச்சி பிரசாரத்திற்காக கடந்த சில ஆண்டுகளில் தலா ஒரு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டதும், நடப்பாண்டில் இது ரூ.3 கோடியாக உயர்த்தப்பட்டிருப்பதும் உண்மை தான். ஆனால், இதைக் கொண்டு எந்த விழிப்புணர்வு பிரசாரமும் செய்யப்படுவதில்லை. உண்மையில், மது விற்பனையை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது என்பது தான் உண்மை. அதனால் தான் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. அரசு பதவியேற்றபோது ரூ.18,081 கோடியாக இருந்த மது வருவாய் நடப்பாண்டு ரூ.30,000 கோடியை தாண்டவிருக்கிறது. தி.மு.க. ஆட்சியாக இருந்தாலும், அ.தி.மு.க. ஆட்சியாக இருந்தாலும் சரி மது விற்பனை ஊக்குவிக்கப்படுகிறதே தவிர சிறிதும் கட்டுப்படுத்தப்படவில்லை என்பது தான் உண்மை.

மது விற்பனையை கட்டுப்படுத்துவதற்காக நீதிமன்றங்கள் பல்வேறு அறிவுரைகளை வழங்கினாலும் அவற்றை தமிழக அரசு மதிப்பதில்லை என்பது தான் உண்மை. எனவே, தமிழ்நாட்டில் மதுப்பழக்கத்தின் தீமைகளை கட்டுப்படுத்த முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவது மட்டும் தான் ஒரே தீர்வாகும். ஆனால், மதுவை நம்பி ஆட்சி நடத்தும் அ.தி.மு.க. அரசு நிச்சயமாக மது விலக்கை நடைமுறைப்படுத்தாது. அதேநேரத்தில், 2016 ஆண்டு பா.ம.க. ஆட்சிப் பொறுப்பேற்றதும் முதலமைச்சர் மருத்துவர் அன்புமணி இடும் முதல் கையெழுத்து முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதாகத் தான் இருக்கும்” என்று கூறி உள்ளார்.

Leave a Reply