shadow

dmk electionதிமுக தலைவர் கருணாநிதியின் சொந்த தொகுதியான திருவாரூரில் திமுக கட்சியின் உட்கட்சித் தேர்தலில் பயங்கர அமளி ஏற்பட்டுள்ளது. இதனால் திமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

திமுக உட்கட்சித்தேர்தல் மறியல், கைது எனும் அளவிற்கு வளர்ச்சி கண்டிருக்கிறது. அதிர்ச்சி என்னவென்றால் இவ்வளவும் நடந்திருப்பது தி.மு.க தலைவர் கருணாநிதியின் சொந்த தொகுதியில் என்பதுதான்.

திருவாரூர் மாவட்ட செயலாளராக இருந்த கலைச்செல்வன் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர்  படுகொலை செய்யப்பட்டதை அடுத்து அவரது தம்பி கலைவாணனை மாவட்ட செயலாளராக திமுக தலைமை நியமித்தது.

இதுவரை சுமூகமாக போய்க்கொண்டிருந்த மாவட்ட கழகம் கலைவாணனின் அதிரடி நடவடிக்கைகளாலும், டி.ஆர்.பாலுவின் தலையீட்டாலும் பெரும் குழப்பம் நிலவி வருகிறது.

திருவாரூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 13 ஒன்றியங்களில் 4 ஒன்றியங்கள் தவிர மற்ற ஒன்றியங்களில் தேர்தல் மூலம் நிர்வாகிகள் தேர்வாக வேண்டிய நிலையில் இன்று காலை திருவாரூரில் கலைவாணனுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருவாரூர் நகர செயலாளருக்கான தேர்தல் நடைபெற்றபோது கலைவாணன் பெரும்பாலான வாக்காளர்களை கடத்திக் கொண்டுபோய்விட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதை கண்டித்து டி.ஆர்.பாலு கோஷ்டியில் உள்ள சங்கர் தலைமையில் இன்று நுற்றுக்கணக்கானோர் கலைவாணனை விமர்சனம் செய்து கோஷங்கள் எழுப்பியதோடு, சாலை மறியலிலும் ஈடுபட்டனர். சாலைமறியலை தொடர்ந்து பொது அமைதிக்கு பங்கம் விளைவித்ததாக கூறி காவல்துறை அவர்களை கைது செய்தது.

Leave a Reply