9சென்னை மட்டுமின்றி கோவை, திருச்சி, சேலம் உள்ளிட்ட மற்ற நகரங்களிலும் அடுக்குமாடிக் குடியிருப்புகள் மழைக்காலக் காளான்கள் போல முளைத்துக்கொண்டே இருக்கின்றன. இன்று வீட்டுத் தேவைகளை நிறைவேற்றுவதில் அடுக்குமாடிக் குடியிருப்புகளே முக்கியப் பங்கு வகிக்கின்றன. அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வீடு வாங்கும்போது சில விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.

என்னென்ன தேவை?

அடுக்குமாடிக் குடியிருப்புகள் வாங்குபவர்கள் முக்கியமாக நிலத்திற்கான ஆவணங்கள், கிரயப் பத்திரம், பட்டா, சிட்டா, அடங்கல், அங்கீகாரச் சான்றிதழ், வில்லங்கச் சான்றிதழ், சட்டவல்லுனர் ஒப்புதல் சான்று, உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதி ஆகியவை உள்ளனவா என ஆய்வு செய்ய வேண்டும். மேலும், அடுக்கு மாடிக் குடியிருப்பு கட்டப்பட்ட இடத்திற்கான மண் பரிசோதனை, கான்கிரீட் பரிசோதனைச் சான்றிதழ்கள் உள்ளனவா என்பதையும் கவனமாக ஆராய வேண்டும். அடுக்கு மாடிக் குடியிருப்புகள் பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும், அதன் தரம் உறுதியாக இருக்கிறதா என்பதே முக்கியம். வீடு வாங்கத் திட்டமிட்டுச் செல்பவர்கள், பொறியாளரை உடன் அழைத்துச் சென்று, கட்டிட அமைப்பு, கட்டுமான முறை, வீடு அமைந்துள்ள பகுதி என அனைத்தும் அறிந்துகொண்டு, வாங்குவது புத்திசாலித்தனம்.

அனுமதியை ஆராயுங்கள்

எத்தனைத் தளங்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் அனுமதி பெற்றுக் கட்டப்பட்ட அடுக்கு மாடி என்பதை முக்கியமாகப் பார்க்க வேண்டும். சிலர் நான்கு மாடிகளுக்கு மட்டும் அனுமதி பெற்றுவிட்டு, ஐந்து, ஆறு என அடுக்கிக் கொண்டே போவார்கள். இவ்வாறு அனுமதியில்லாத மேல் மாடியில் வீடுகள் வாங்கிய பின், உள்ளாட்சி அனுமதியின்மையைக் காரணம் காட்டி, இடிக்க உத்தரவு வந்தால், வீடு வாங்கியவர்களே பாதிப்படைவார்கள். எனவே, அழகிய அடுக்கு மாடிக் குடியிருப்பு வாங்குவதைக் காட்டிலும், அதில் உள்ள நிறை, குறைகளை ஆய்வு செய்து வாங்குவது அவசியம்.

என்னென்ன வசதிகள் வேண்டும்?

நகரப் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கு வரவேற்பு உள்ளது. அடுக்குமாடிக் குடியிருப்புகள் உள்ள இடத்திற்கு அருகில் மார்க்கெட், மருத்துவமனை, பள்ளி, கல்லுாரி, பேருந்து நிலையம் உள்ளிட்ட வசதிகள் உள்ளனவா எனப் பார்த்துத், தேர்வு செய்வது நல்லது. போக்குவரத்து வசதியில் எவ்வித பிரச்சினையும் இல்லை என்று நினைப்பவர்கள் புறநகர்ப் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்டிடங்களைத் தாராளமாக வாங்கலாம்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *