shadow

download (1)

கூந்தலைப் பராமரிக்க எதைப் பயன்படுத்துவது? நாம் திகைத்துப்போகும் அளவுக்கு ஏராளமான எண்ணெய்கள், ஷாம்புக்கள், கண்டிஷனர்களைப் பரிந்துரைக்கின்றன விளம்பரங்கள். இவை விதவிதமான பெயர்களில், நறுமணங்களில் விற்கப்படுகின்றன. விளம்பரங்கள் பரிந்துரைக்கும் எண்ணெயோ ஷாம்புவோ சிலருக்கு நல்ல பலன்களைத் தரும்; வேறு சிலருக்கு அதே நன்மைகளைத் தராது. அப்படியானால், பாதுகாப்பான முறையில் கூந்தலைப் பராமரிப்பது எப்படி?

இயற்கையாகச் சுரக்கும் எண்ணெய்

கூந்தலில் நாம் தடவும் எண்ணெய்கள் தேங்காய், எள் போன்ற தாவரப் பொருட்களில் இருந்து பிரிக்கப்படுபவை. நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் எதுவாக இருந்தாலும், தடவிய பின், 20 நிமிடங்கள் வரை கூந்தலில் தடவி ஊறவிட்டு அலசிவிடுவதே சரி.

நம் முடியின் வேர்ப்பகுதி, மண்டைத்தோலில் எண்ணெய் சுரப்பிகள் இருக்கும். இதை செபாஷியஸ் சுரப்பிகள் (Sebaceous glands) என்று சொல்வோம். இதில் இருந்து ‘சீபம்’ என்ற எண்ணெய் சுரக்கிறது. ஒரு சிலருக்கு இது அதிகமாகவோ குறைவாகவோ சுரக்கலாம். இது ஒவ்வொருவரின் உடல்நிலையைப் பொறுத்து மாறுபடும்.

எண்ணெய்ப் பசை, வறட்சி என எந்த வகைக் கூந்தலை உடையவராக இருந்தாலும், வெளியில் போகும்போது எண்ணெய் தடவிக்கொண்டு சென்றால், சூழலில் உள்ள தூசு, அழுக்கு, உடல் வெப்பத்தினால் சுரக்கும் எண்ணெய் போன்ற அனைத்தும் சேர்ந்து, பொடுகைக்கொண்டு வந்துவிடும். எனவே, வெளியில் செல்பவர்கள் எண்ணெய் தடவிக்கொண்டு செல்லக் கூடாது.

எண்ணெயைப் பயன்படுத்தும் வழிகள்

எண்ணெயைக் கூந்தலில் தடவி, 20 நிமிடங்கள் ஊறிய உடனே அலசிவிட வேண்டும். இரவில் தடவி, மறுநாள் குளிப்பது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.

எண்ணெயைக் கூந்தலில், சருமத்தில் பூசிக்கொண்டு வெளியே செல்லும்போது சூரிய வெப்பத்தை நேரடியாக இழுத்து சருமம், கூந்தலைப் பாதிக்கும்.

தினமும் காலை கூந்தலை அலசுவதால், முதல் நாள் படிந்த தூசு, அழுக்கு நீங்கிவிடும். சைனஸ், தலைவலி, சளித் தொந்தரவு உடையவர்கள், வாரத்துக்கு இருமுறை, 20 நிமிடங்கள் வரை எண்ணெய் தடவிய பின் கூந்தலை அலசலாம்.

இயன்றால், மாலையில் கூந்தலை அலசுவது நல்லது. இதனால், நீண்ட தூரம் பயணம் செய்ததால் ஏற்பட்ட அழுக்கு நீங்கி, முடி கொட்டுவது தடுக்கப்படும்.

முகப்பரு இருப்பவர்களுக்கு, அதிகமாக எண்ணெய் சுரப்புகள் சுரக்கும் என்பதால், இரண்டு நாட்களுக்கு ஒருமுறை தலையணை உறையை மாற்ற வேண்டும்.

ஷாம்பு, கண்டிஷனர், சீரம் பயன்படுத்தும் முறை

ஷாம்பு: வறட்சி, எண்ணெய், நார்மல் போன்ற அனைத்து கூந்தல் வகையினரும், பி.ஹெச் (pH) 5.5 அளவு கொண்ட ஷாம்புவைப் பயன்படுத்துவது நல்லது. ஷாம்பு பயன்படுத்துபவர்கள், அவசியம் கண்டிஷனரைப் பயன்படுத்த வேண்டும். ஷாம்புவை நீரில் கரைத்து அதன் பிறகு கூந்தலில் தடவ வேண்டும்.

கண்டிஷனர்: கண்டிஷனரை தலையில் முடியின் வேர்ப்பகுதியில் பூசக் கூடாது. கூந்தலில் மட்டும்தான் பூச வேண்டும். கண்டிஷனர் பூசிய மூன்று நிமிடங்களுக்குப் பிறகு, நீரால் கூந்தலை அலச வேண்டும். ஏனெனில், கண்டிஷனர் கூந்தலை கோட் செய்ய இரண்டு மூன்று நிமிடங்கள் ஆகும்.

சீரம்: முடி உதிர்தல் பிரச்னை, நுனி முடி பிளவுகள், அடங்காத முடி, சுருட்டை முடி, சிக்கு விழும் முடி போன்ற பிரச்னை உள்ளோர் சீரம் பயன்படுத்தலாம். தலைக்குக் குளித்த பின், துவட்டும்போது பாதி ஈரமாக இருக்கும் பட்சத்தில் சீரத்தைத் தடவ வேண்டும். இது வெயில், மழை, தூசு, அழுக்கிலிருந்து கூந்தலைப் பாதுகாக்கும்.

மெடிகேட்டட் சீரம்: கலரிங் செய்த கூந்தல், ஸ்டரெயிட்னிங் செய்த கூந்தல் போன்றவற்றுக்குப் பிரத்யேக சீரம்கள் கிடைக்கின்றன. அவற்றை வாங்கிப் பயன்படுத்துவதே சரி.

மருத்துவரிடம் சென்று எந்த சீரம், ஷாம்பு, கண்டிஷனர் பொருந்தும் என ஒரு முறை ஆலோசனை பெற்றுக்கொள்வது நல்லது.

 

Leave a Reply