shadow

201601281706345358_Perumal-risk-alleviation-of-suffering-out_SECVPF

றைபக்தி அதிகம் கொண்டவர்கள் தினமும் கோவிலுக்கு செல்வதை வழக்கமாக வைத்திருப்பார்கள். சில பக்தர்கள் எப்போதாவது கோவிலுக்கு செல்வார்கள். சிலர் சங்கடங்கள் வரும்போது மட்டுமே கோவிலை நாடி ஓடுவார்கள். இப்படி எந்த நிலையிலான பக்தர் களாக இருந்தாலும் சரி அவர்களின் சங்கடங்களை தீர்த்து, உடனடி நிவாரணம் அளிப்பவராக அருள் பாலிக்கிறார், இடர் தீர்த்த பெருமாள். இடர்களை தீர்க்கவே இவர் வீற்றிருப்பதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.

நாகர்கோவில் நகரில் வடிவான தெருக்கள் அமைந்த வடிவீஸ்வரம் பகுதியில் இந்த பெருமாள் வீற்றிருக்கிறார். குமரி மாவட்டத்தில் இடர்தீர்த்த பெருமாள் கோவில் என்றால் அறியாதவர்கள் இருக்க முடியாது என்று கூறப்படுகிறது. அந்த அளவுக்கு இத்தல இறைவன் அந்தப் பகுதியில் வெகு பிரபலமானவர். கிழக்கு நோக்கி அமையப்பெற்ற இந்தக் கோவிலில் இடர் தீர்த்த பெருமாள் சன்னிதி நடுநாயகமாக உள்ளது. பெருமாளும் கிழக்கு நோக்கியே காட்சி அளிக்கிறார். கருவறையில் நின்ற கோலத்தில் அருள் பாலிக்கும் பெருமாளை தரிசிப்பது கண்கொள்ளக் காட்சியாகும். அதுவும் முழு அலங்காரத்தில் இருக்கும் பெருமாளை தரிசிப்பது சிறப்பு வாய்ந்ததாகும்.

பெரும்பாலும் பெருமாள் கோவில்களில், பெருமாள் தனியாக வீற்றிருந்து அருள்பாலிப்பார். இந்த தலத்தில் பெருமாளுடன் ஸ்ரீதேவி, பூதேவி அம்மனும் இணைந்திருப்பது விசேஷமாக கருதப்படு கிறது. பொதுவாக பெருமாள் கோவில்களில் சனிக்கிழமை வழிபாடு மிகவும் விசேஷமாக இருக்கும். இந்த ஆலயத்திலும் சனிக்கிழமைகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் ஆலய வழிபாட்டுக்காக வரும் பக்தர்களின் எண்ணிக்கை ஏராளம். பக்தர்களுக்கு பிரசாதமாக துளசி தீர்த்தம் வழங்கப்படுகிறது.

பெருமாள் சன்னிதிக்கு முன்பாக ராஜேஸ்வரி அம்மன் காட்சி தருகிறார். தென்திசை நோக்கி அம்மன் வீற்றிருக்கிறார். சன்னிதானத்தின் வெளியே உள்ள பிரகாரத்தில் இடமிருந்து வல்லப கணபதி (கன்னி மூலையில் வீற்றிருக்கிறார்), முருகன் சன்னிதி, சிவன் சன்னிதி, சீதாராமர்–லட்சுமணர் சன்னிதி, அனுமர் சன்னிதி போன்றவை உள்ளன. மேலும் நவக்கிரக சன்னிதியும் உள்ளது. இது தவிர கோவிலின் நுழைவு வாசலை ஒட்டி இடப்பக்கம் அரசமரத்து விநாயகர் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். சொர்க்கவாசல் இங்கு கிடையாது. சிவனுக்கு உகந்த வில்வமரம் இந்த கோவிலில் இருப்பது தனிச் சிறப்பு.

இந்த கோவிலில் தினமும் அதிகாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 6.30 மணிக்கு அபிஷேகமும், 7 மணிக்கு தீபாராதனையும் நடக்கிறது. பின்னர் பகல் 12 மணிக்கு நடையை அடைத்து மாலை 4.30 மணிக்கு மீண்டும் திறக்கிறார்கள். இரவில் 7.30 மணிக்கு நடை சாத்தப்படுகிறது. பெருமாளுக்கு உகந்த சனிக்கிழமைகளில் இந்த நேரம், பக்தர்களின் கூட்டத்தை கணக்கிட்டு மாறுபடுகிறது. இந்த கோவிலில் தமிழக அரசின் அன்னதான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தின் மிக அருகில் இந்தக் கோவில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய திருவிழாக்கள்

வடிவீஸ்வரம் இடர் தீர்த்த பெருமாள் கோவிலில் மாதம்தோறும் (மாசி தவிர) விசேஷம் உண்டு. அதன் விவரம் வருமாறு:–

சித்திரை 1–ந் தேதி     –     சிறப்பு பூஜை.

10–ந் தேதி     –     108 குட பால் அபிஷேகம்.

வைகாசி மாதம்     –     மலர் முழுக்கு பெருவிழா.

ஆனி மாதம்     –     வருஷாபிஷேகம்.

ஆடி மாதம்     –     ராஜராஜேஸ்வரிக்கு சிறப்பு பூஜை.

ஆவணி மாதம்     –     கிருஷ்ண ஜெயந்தி.

புரட்டாசி மாதம்     –     கருடசேவை.

ஐப்பசி மாதம்     –     கந்த சஷ்டி.

கார்த்திகை மாதம்     –     பரணி தீபம்.

மார்கழி மாதம்     –     திருக்கல்யாணம்.

தை 1–ந் தேதி     –     சிறப்பு பூஜை.

பங்குனி     –     ராமநவமி.

Leave a Reply