shadow

மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி குண்டர் சட்டத்தில் கைது

மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்பட 4 பேரை போலீசார் குண்டர்சட்டத்தில் கைது செய்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற மாணவர்களின் எழுச்சி போராட்டத்திற்கு பின்னர் சென்னை மெரீனாவில் எந்த கூட்டம் மற்றும் பேரணிக்கும் போலீசார் அனுமதி தருவதில்லை. இந்த நிலையில் மே 21ஆம் தேதி கடந்த மே21-ம் தேதி சென்னை மெரினாவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு மே 17 இயக்கத்தினர் அழைப்பு விடுத்திருந்தனர்.

ஆனால் சென்னை மாநகரப் போலீசார் இந்த பேரணிக்கு அனுமதி வழங்கவில்லை. ஆனால் போலிசாரின் தடையை மீறி திருமுருகன் காந்தி தலைமையில் மே 17 இயக்கத்தினரும், வேல்முருகன் தலைமையில் தமிழக வாழ்வுரிமை கட்சியினரும் பேரணி நடத்த முயன்றனர். அதில் இயக்குநர் கவுதமன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் இந்த பேரணி நடந்து ஒருவாரம் முடிந்துவிட்ட நிலையில் தற்போது திடீரென மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட நான்கு பேரை குண்டர்சட்டத்தில் போலீசார் கைது செய்துள்ளனர். திருமுருகன் காந்தி, இளமாறன், டைசன், அருண்குமார் ஆகியோரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர்.

மத்திய மாநில அரசு அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்தியது உள்ளிட்ட 17 வழக்குகள் திருமுருகன் காந்தி மீது நிலுவையில் உள்ளதால் அவர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளார் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply