shadow

theri-3‘தெறி’ திரைவிமர்சனம். முதல் பாதி மட்டுமே தெறிக்கிறது.

‘மெளன ராகம்’ என்ற படத்தை தழுவி ‘ராஜா ராணி’ என்ற படத்தை இயக்கிய அட்லி, தற்போது ‘பாட்ஷா, என்னை அறிந்தால்’ போன்ற மிக்ஸ் செய்து ‘தெறி’ படத்தை இயக்கியுள்ளார். விஜய் ரசிகர்களுக்கான பக்கா மாஸ் படம்தான் ‘தெறி’

ஐ.பி.எஸ். அதிகாரி விஜயகுமார் (விஜய்), டாக்டர் சமந்தாவை காதலித்து திருமணம் செய்து ஒரு குழந்தையுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றார். இந்நிலையில் ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு இளம்பெண்ணை அமைச்சர் மகேந்திரன் மகன் கற்பழித்து விடுகிறார். குற்றவாளியை கண்டுபிடிக்கும் விஜயகுமார், அவர் அமைச்சர் மகன் என்று தெரிந்தும் என்கவுண்டர் செய்கிறார். இதனால் ஆத்திரமடையும் அமைச்சர் மகேந்திரன், விஜய் குடும்பத்தை கொலை செய்கிறார். குழந்தையுடன் தப்பிக்கும் விஜய், போலீஸ் வேலையே வேண்டாம் என்று மகளுடன் கேரளாவுக்கு செல்கிறார். இந்நிலையில் விஜய்யை மீண்டும் கண்டுபிடிக்கும் மகேந்திரன் விஜய் மகளை கொலை செய்ய முயற்சி செய்கிறார். மகளை வில்லன் மகேந்திரனிடம் எப்படி விஜய் காப்பாற்றுகிறார் என்பதுதான் மீதிக்கதை.

ஐ.பி.எஸ். அதிகாரி விஜயகுமார், கேரளாவில் பேக்கரி வைத்திருக்கும் ஜோசப் என இரண்டு கெட்டப்புகளில் விஜய் நடித்துள்ளார். முதல் அரைமணி நேரம் மகள் நைனிகா, மொட்டை ராஜேந்திரன் ஆகியோர்களுடன் காமெடி, நைனிகாவின் டீச்சர் எமிஜாக்சனுடன் ஒரு லுக் என ஜோசப் குருவில்லாவின் கேரக்டரில் படம் கலகலப்பாக நடித்துள்ளார். பின்னர் ப்ளாஷ்பேக்கில் கம்பீரமான ஐ.பி.எஸ். அதிகாரி விஜய், சமந்தாவுடன் காதல், ராதிகாவுடன் அம்மா பாசம், பெண்களுக்கு எதிரான குற்றத்தை கண்டு கண் கலங்குதல் என விஜய் பல பரிணாமங்களில் நன்றாக நடித்துள்ளார்.

விஜய்க்கு அடுத்த மனதில் நிற்பவர் மீனாவின் மகள் நைனிகாதான். அப்பா விஜய்யை ‘பேபி பேபி என்று செல்லக்குரலில் இவர் கூப்பிடும் அழகே தனி.

சமந்தா பிளாஷ்பேக்கில் மட்டுமே வரும் நாயகி. டாக்டராக அறிமுகமாகி அதன் பின்னர் விஜய்யை காதலித்து ஒரு குழந்தையை பெற்று கொடுத்துவிட்டு உயிரை விடும் கேரக்டர். அடிக்கடி கண்கலங்கி நம்மையும் கண்கலங்க வைக்கின்றார்.

‘ஐ’, ‘2.0’ போன்ற பெரிய பட்ஜெட் படத்தில் நடித்த நடிகை எமிஜாக்சனை இவ்வளவு சிறிய கேரக்டரில் அதுவும் முக்கியத்துவம் இல்லாத கேரக்டரில் பயன்படுத்தியுள்ளார் அட்லி. எமிஜாக்சன் மீது அவருக்கு என்ன கோபமோ தெரியவில்லை. விஜய் படத்தில் நானும் நடித்துள்ளேன் என்று கூறிக்கொள்வதை தவிர வேறு எந்த பெருமையும் இந்த படத்தால் எமிக்கு கிடைக்க போவதில்லை.

வில்லன் பாத்திரத்திற்கு மகேந்திரன் நல்ல தேர்வு என்றாலும் அவரை அட்லி சரியாக பயன்படுத்தவில்லை. விஜய்யை பழிவாங்க அவர் போடும் திட்டங்கள் எல்லாம் செம மொக்கை. வில்லன் கேரக்டர் வலிமை இல்லாததால் இரண்டாவது பாதி படம் கொஞ்சம் போர் அடிக்கின்றது.

ஜி.வி.பிரகாஷ் தனது ஐம்பதாவது படம் என்பதை தனது அதிரடி இசையால் நிரூபித்துள்ளார். படம் முழுவதும் பின்னணி இசை தெறிக்க வைக்கின்றது. பாடல்களும் ஆட்டம் போட வைக்கும் ரகம். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஜித்து ஜில்லாடி பாடல் மட்டும் படமாக்கப்பட்ட விதம் சுமார். ஆனால் அந்த பாடலில் விஜய்யின் டான்ஸ் சூப்பர்

ஜார்ஜ் வில்லியம்ஸின் கேமிரா மற்றும் ரூபனின் எடிட்டிங் பணிகள் சூப்பர். குறிப்பாக பாடல் காட்சிகளில் கேமிரா ஒர்க் அபாரம். அதிர வைக்கும் சண்டைக்காட்சிகளில் ஸ்டண்ட் இயக்குனரின் உழைப்பு தெரிகிறது.

மொத்தத்தில் ‘தெறி’ முதல் பாதி பக்கா மாஸ் ஆகவும், இரண்டாவது பாதி விஜய் ரசிகர்களை மட்டும் திருப்தி செய்யும் வகையில் உள்ளது.

Leave a Reply