பாராளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசிப்பதற்காக தி.மு.க. பொதுக்குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நேற்று நடைபெற்றது. காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணி வரையும், பின்னர் மாலை 4 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரையும் கூட்டம் நடைபெற்றது.

கூட்டம் தொடங்கியதும் துணை பொதுச்செயலாளர் துரைமுருகன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, பாராளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்க இந்த பொதுக்குழு கூடி உள்ளது. திமுக பொதுக்குழுவில் என்ன முடிவு செய்யப்படுகிறது என்பதை இந்த நாடே எதிர்பார்க்கிறது. கட்சியில் எந்த நிலைப்பாட்டை எடுத்தாலும் அதற்கு முன்பாக பொதுக்குழுவில் கருத்து கேட்பது வழக்கம். உங்கள் கருத்தை அறிய இக்கூட்டம் கூட்டப்பட்டு உள்ளது என்று அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து பொதுக் குழுவில் பேசிய பெரும்பாலானவர்கள், பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொள்ளக் கூடாது என்று கூறினார்கள்.

பின்னர் பொதுக்குழுவின் இறுதியில் பாராளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக தனித்தீர்மானம் ஒன்று கொண்டு வரப்பட்டது.

அதில் கூறப்பட்டிருப்பதாவது, நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் தோழமை கட்சிகளுடன் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்திடவும், தொகுதி பங்கீடு பற்றி கலந்து பேசிடவும், கூட்டணிக்கான பேச்சுவார்த்தை குழு ஒன்றை திமுக சார்பில் அமைத்து அறிவித்திடவும், கூட்டணியை உருவாக்கிடவும் தலைவர் கருணாநிதிக்கும், பொதுச்செயலாளர் அன்பழகனுக்கும் இப்பொதுக்குழு முழு அதிகாரம் வழங்குகிறது என்று அந்த தீர்மானத்தில் கூறப்பட்டு உள்ளது.

நிறைவாக திமுக தலைவர் கருணாநிதி பேசினார். அப்போது அவர் கூறியதாவது, காலையில் இருந்தே உங்களுடைய கருத்துகளை கேட்டு வருகிறேன். கருத்துகளை கேட்டு முடிவு செய்யும் இயக்கம் நமது இயக்கம். சமீபகாலமாக பத்திரிகைகளில் வரும் செய்திகளை வைத்து நரேந்திர மோடி குறித்து பேசுகிறீர்கள். ஆனால் எனக்கோ, பேராசிரியருக்கோ, ஸ்டாலினுக்கோ அந்த சலனம் ஏற்படவில்லை.
பாரதீய ஜனதா நம்முடன் கூட்டணி வைக்காத கட்சி இல்லை. பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களான வாஜ்பாய், அத்வானி ஆகியோர் கண்ணியமான தலைவர்கள். இவர்கள் இருவரும் எந்த கோரிக்கை வைத்தாலும் நிறைவேற்றி கொடுத்து இருக்கிறார்கள். அந்த வகையில் அவர்களை மதிப்புமிக்க தலைவர்களாகவே கருதுகிறோம். ஆனால் அப்போது இருந்த பாரதீய ஜனதா வேறு. இப்போதுள்ள பாரதீய ஜனதா வேறு.

கூட்டணி குறித்து பேசும்போது அந்த கட்சியின் தலைமை யார்? என்பதை பார்க்க வேண்டும். அதிலிருந்து வித்தியாசங்களை உணர முடியும். பாராளுமன்ற தேர்தலில் கூட்டணியே இல்லை என்று சொல்லவில்லை. குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு கூட்டணி குறித்து முடிவு செய்யும்.
நம்முடன் இருந்து துரோகம் செய்த காங்கிரசுடன் இனி கூட்டணி கிடையாது. காங்கிரசுடன் கூட்டணி வைத்து விடுவோம் என்று நீங்கள் ஒரு போதும் எண்ண வேண்டாம். ஊழல் குற்றச்சாட்டில் கனிமொழிக்கு களங்கம் விளைவித்தும், ஆ.ராசா மீது பழி சுமத்தியும், தயாளு அம்மாளுக்கு துயரத்தை ஏற்படுத்தியதோடு கட்சிக்கும் களங்கம் விளைவித்தவர்கள், இவர்களை பலிகடாவாக ஆக்கிவிட்டு தப்பி விட்டார்கள். இந்த வழக்கு இன்னும் நடக்கிறது. சி.பி.ஐ. யாருடைய நிர்வாகத்தில் உள்ளது என்பது உங்களுக்கு தெரியும். பூஜ்ஜியங்களை போட்டு ஊழல் குற்றச்சாட்டில் திமுகவை சிக்க வைத்து விட்டார்கள். கனிமொழி, ஆ.ராசா ஆகியோர் சிறைக்கு போனார்கள்.

நீங்கள் (தொண்டர்கள்) இருக்கும் போது நான் ஏன் பயப்பட வேண்டும். தனித்து நின்று தேர்தலை சந்திக்கும் தைரியம் நமக்கு உண்டு. கழகம் நிறுத்தும் வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும். கடைசி வரை ஒற்றுமையாக இருந்து கட்சியின் வெற்றிக்கு உழைக்க வேண்டும் என்று கருணாநிதி கூறினார்.

முன்னதாக நேற்று பொதுக் குழு கூட்டத்தில் பேசிய சிலர், பாராளுமன்ற தேர்தலில் தேசிய கட்சிகள் இடம் பெறாத ஒரு அணியை அமைத்து மக்கள் மன்றத்திற்கு செல்ல வேண்டும் என்று வலியுறுத்தினர்.

தென்சென்னை மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான ஜெ.அன்பழகன் பேசுகையில்; “வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் எக்காரணத்தை கொண்டும் நாம் காங்கிரஸ் கட்சியை ஆதரிக்கக்கூடாது. அதற்காக பாரதீய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்தாலும் தப்பில்லை. அதே நேரத்தில் பாரதீய ஜனதா அமைச்சரவையில் நாம் இடம் பெறக்கூடாது. மந்திரிசபையில் இடம் பெற்றால் மட்டும் நமக்கு என்ன நன்மை விளைந்து விட போகிறது. வெளியில் இருந்து ஆதரவு கொடுக்கலாம்” என்றார்.

மேலும் சிலர், “பாரதீய ஜனதா கட்சியுடன் கூட்டணி சேர்ந்தாலும், சேராவிட்டாலும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி நமக்கு வேண்டாம். அதிமுகவை விட நமக்கு வாக்கு வங்கி அதிகமாக இருக்கிறது. ஏற்காடு இடைத்தேர்தலில் நம்முடைய கட்சி கணிசமான வாக்குகளை பெற்றுள்ளதே இதற்கு சாட்சி. ஆகவே ஒரு புது அணியை நாம் அமைக்க வேண்டும், தேவைப்பட்டால் தனித்து கூட நாம் களம் காணலாம்” என்றனர்.

பெரும்பாலானோர் பாரதீய ஜனதா கூட்டணியில் இடம் பெறலாம் என்று கருத்து தெரிவித்தனர். வாஜ்பாய் அரசில் இடம் பெற்று இருந்ததையும் அவர்கள் சுட்டிக்காட்டி பேசினர். இன்னும் சிலர் திமுக கூட்டணியில் தேமுதிகவை கொண்டு வரலாம் என்று தெரிவித்தனர். கடந்த காலங்களில் நாம் அமைத்த அணி தான் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி வாகை சூடியிருக்கிறது. பிரதமரை தீர்மானிக்கும் இடத்தில் (கருணாநிதி) நீங்கள் இருந்து இருக்கிறீர்கள். ஆகவே அதனை கருத்தில் கொண்டு நம் கூட்டணி குறித்து முடிவு செய்ய வேண்டும் வலியுறுத்தினர்.

பொதுக்குழு கூட்டத்தில், மறைந்த தென்ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. ஏற்காடு இடைத்தேர்தலின் போது மரணமடைந்த மாணவர் அணி துணை அமைப்பாளர் ராஜமுருகன், பேராசிரியர் அன்பழகனின் துணைவியார் சாந்தகுமாரி, வீரபாண்டி ஆறுமுகம், முன்னாள் எம்.பி. செ.குப்புசாமி, சமயநல்லூர் செல்வராஜ் உள்பட மறைந்த கட்சி நிர்வாகிகளுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

இரங்கல் தீர்மானம் வாசித்து முடித்ததும் அனைவரும் எழுந்து நின்று 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

பொதுக்குழு கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், துணை பொதுச்செயலாளர்கள் துரைமுருகன், வி.பி.துரைசாமி, எஸ்.பி.சற்குணபாண்டியன், திமுக பாராளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு, எம்.பி.க்கள் கவிஞர் கனிமொழி, ஜெகத்ரட்சகன், தயாநிதிமாறன், முன்னாள் அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, பொன்முடி, மகளிர் அணி புரவலர் இந்திரகுமாரி, முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், குஷ்பு, கவிஞர் காசிமுத்து மாணிக்கம் மற்றும் முன்னணி நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்பட பொதுக்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என 2,026 பேர் பங்கேற்றனர்.

Leave a Reply