shadow
sukran.jpgஅசுரர்களின் குருவாக விளங்குபவர் சுக்ர பகவான். சகல வித்தைகளிலும் வல்லவரான இவர், சிவபெருமானை துதித்து வற்றாத செல்வத்தையும், அமர சரீரத்தையும் பெற்றவர். மேலும் சிவனை வேண்டி நவக்கிரகங்களில் ஒருவர் ஆனார். வெள்ளிக்கிழமை இவரது பெயரால் சுக்ரவாரம் என்று அழைக்கப்படுகிறது. ஒரு முறை ஈசனின் கோபத்தைத் தணித்து, சுக்ரனை அம்பிகை காப்பாற்றினாள். ஆகவே வெள்ளிக்கிழமைகளில் அம்மனை வழிபட்டால், சுக்ரனின் ஆசி கிட்டும்.

வெண்மை நிற திருமேனி கொண்டவர். இவருக்கு உகந்த உலோகம் வெள்ளி. பஞ்சபூதங்களில் நீர். மிருத சஞ்சீவினி என்ற மந்திரத்தின் வாயிலாக இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் சக்தி படைத்தவராக சுக்ரன் விளங்கினார் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன. அறிவில் சிறந்த பண்டிதராகவும், சகல சாஸ்திரங்களிலும் கரை கண்டவராகவும் இவர் திகழ்கிறார். சுக்ரனை வழிபட்டு மொச்சை பயிறை நிவேதனம் செய்வதும், அதனை தானம் செய்வதும் சுக்ரனின் அனுக்கிரகத்தை பெற வழிவகுக்கும்.

வாமன அவதாரத்தில், சிறிய உருவத்தில் வந்து மகாபலி சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் கேட்டார் திருமால். அப்போது தானம் கொடுக்கக் கூடாது என்று மகாபலியை, சுக்கிராச்சாரியார் தடுத்தார். ஆனால் மகாபலி, சுக்ரனின் சொல்லைக் கேட்காமல் தானம் கொடுக்க முன்வந்தான். அப்போது சுக்ரன் வண்டு உருவம் எடுத்து, தானம் செய்ய நீர் வார்க்கும் கமண்டலத்தின் துவாரத்தை அடைத்தார். வாமனர் ஒரு தர்ப்பையால் துவாரத்தை குத்தினார். அப்போது சுக்ரனின் ஒரு கண், பார்வையற்று போனது. இதையடுத்து சுக்ரன் திருமயிலையில் சிவலிங்கத்தை பூஜித்து தன் கண்ணை திரும்பப் பெற்றார். சுக்ரன் பூஜித்ததால் இங்குள்ள இறைவன் வெள்ளீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.

    சுக்ர காயத்திரி மந்திரம்:–

    ‘ஓம் அச்வத்வஜாய வித்மஹே

    தநு ஹஸ்தாய தீமஹி

    தந்நோ சுக்ரஹ் ப்ரசோதயாத்’

பொருள்:– குதிரைக் கொடியை உடைய சுக்ர தேவனை அறிவோமாக. வில்லைக் கையில் ஏந்தி நிற்பவனான அவன் மீது தியானம் செய்கிறோம். சுக்ர பகவானான அவர், நம்மை காத்து அருள்செய்வாராக.

கோவில்களில் உள்ள நவக்கிரக சன்னிதியில் சுக்ர பகவானை வழிபடும் பொழுது இந்த காயத்திரி மந்திரத்தைச் சொல்லி வழிபட வேண்டும். தினமும் 108 முறை இந்த மந்திரத்தை உச்சரித்து வழிபாடு செய்வதால், கலைகளில் சிறந்து விளங்கலாம். விருப்பங்கள் நிறைவேறும். அதிர்ஷ்டம் உண்டாகும். வெற்றி கிடைக்கும். நீண்ட ஆயுள் வந்து சேரும். நல்ல வாழ்க்கைத் துணை அமையும். இல்லறம் இனிமையானதாக இருக்கும். வியாபாரம் செழித்து வளரும்.

Leave a Reply