shadow

பிசிசிஐயின் புதிய தலைவர் போட்டியின்றி தேர்வு
bcci
கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிசிசிஐ தலைவர் ஜக்மோகன் டால்மியா திடீரென மரணம் அடைந்ததை அடுத்து, புதிய தலைவராக சஷாங் மனோகர் நேற்று போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டார். இந்த பதவிக்கு பிசிசிஐ-யின் செயலர் அனுராக் தாக்குர் தலைமையில் ஒரு அணியினரும், முன்னாள் தலைவர் என்.சீனிவாசன் தலைமையில் மற்றொரு அணியினரும் போட்டியிட முடிவு செய்திருந்தனர். ஆனால் தலைவர் பதவிக்கு போட்டியிடுபவர்கள் வேட்பு மனுத்தாக்கல் செய்ய கடந்த சனிக்கிழமை இரவு 7 மணி வரை  இந்த பதவிக்கு சஷாங் மனோகர் மட்டுமே வேட்பு மனுத் தாக்கல் செய்திருந்ததால் அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டார்.

பிசிசிஐ புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்ட சஷாங் மனோகர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “கிரிக்கெட்டை நேசிக்கும் ரசிகர்கள் மற்றும் மக்களை கொண்டுள்ள நாடு இந்தியா என்பதால் பிசிசிஐ புகழ்மிக்க அமைப்பாக உள்ளது. சில விரும்பத்தகாத நிகழ்வுகளால் ரசிகர்களின் நம்பிக்கை சிறிது தடுமாற்றம் கண்டது.  பிசிசிஐ-க்கு மீண்டும் புகழை பெற்றுத் தரவேண்டியது அனைத்து உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளின் கடமையாகும்’ என்று கூறினார்.

விதர்பாவை சேர்ந்த சஷாங் மனோகர் (58) கடந்த 10 ஆண்டுகளாக வழக்குரைஞராகப் பணியாற்றி வந்தார். கடந்த 2008-11 ஆம் ஆண்டு வரை அவர் ஏற்கெனவே பிசிசிஐ தலைவர் பதவியை வகித்துள்ளார். இவரது பதவிக்காலத்தில் தான் இந்தியா, 28 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிக்கான உலகக் கோப்பையை மீண்டும் வென்றது.  இந்த சிறப்பை பெற்றுத் தந்த இந்திய வீரர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.1 கோடி ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. 2013 ஆம் ஆண்டில் நடந்த ஐபிஎல் சூதாட்டத்தில் குருநாத் மெய்யப்பன் சூதாட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, சீனிவாசன் பிசிசிஐ தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று குரல் கொடுத்தவர்களில் சஷாங் மனோகரும் ஒருவர். இரண்டாவது முறையாக பிசிசிஐ தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள், முன்னாள், இந்நாள் விளையாட்டு வீரர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
 

Leave a Reply