shadow

‘புரட்சித்தலைவி, அம்மா’ போன்ற வார்த்தைகளை பயன்படுத்தியது தவறு அல்ல. உயர் நீதிமன்றம் உத்தரவு!
amma
சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த ஒரு உத்தரவில் அரசு செலவில் பத்திரிகைகளுக்கு வழங்கப்படும் விளம்பரங்களில், குடியரசு தலைவர், பிரதமர், மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோரது புகைப்படங்களை தவிர பிற பதவிகளில் இருப்பவர்களின் புகைப்படம் இடம்பெறக் கூடாது என்று உத்தரவிட்டிருந்தது. ஆனால் தமிழக அரசு வெளியிட்ட ஒருசில விளம்பரங்களில் புரட்சி தலைவி என்றும், அம்மாவின் ஆட்சி என்ற வசனங்களும் இருந்ததாகவும் இது சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு எதிரானது என்று கூறி வழக்கறிஞர் பி.ரத்தினம் என்பவர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் தள்ளுபடி செய்தனர்.

இந்த வழக்கில் அவர்கள் வழங்கிய தீர்ப்பில், ” ”அரசு விளம்பரத்தில் இடம் பெறவேண்டிய தலைவர்களின் புகைப்படம் குறித்து உச்ச நீதிமன்றம் கடந்த மே 13 ஆம் தேதி தீர்ப்பளித்துள்ளது. ஆனால், தமிழக அரசு ஒரு பக்க விளம்பரத்தை பத்திரிகைகளுக்கு மே 26 ஆம் தேதி கொடுத்துள்ளது. அதில், புரட்சித் தலைவி, அம்மா என்ற வார்த்தை இடம்பெற்றுள்ளதாக மனுதாரர் கூறுகிறார். உச்ச நீதிமன்ற தீர்ப்பு பிறப்பிப்பதற்கு முன்பு, அரசு விளம்பரத்தில் முதலமைச்சர், அமைச்சர்களின் புகைப்படம் இடம்பெறுவதற்கு தடை எதுவும் இல்லாமல் இருந்தது.

அதனால், இந்த விளம்பரத்தை தமிழக அரசும் வழங்கியுள்ளது. அதேநேரம், உச்ச நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பின் விவரங்கள், அரசுக்கு கிடைப்பதற்கு காலதாமதம் ஆகியிருக்கலாம். இதுபோன்ற சூழ்நிலைகளில், நீதிமன்ற தீர்ப்பை தீவிரமாக அமல்படுத்த அரசுக்கு கொஞ்சம் காலதாமதம் ஏற்படுவது வழக்கம்தான். இந்த விளம்பரத்தில், புரட்சித் தலைவி என்ற வார்த்தை இடம்பெற்றுள்ளது. புரட்சித் தலைவி என்ற வார்த்தையை திட்டமிட்டோ அல்லது வேண்டுமென்றோ அந்த விளம்பரத்தில் புகுத்தப்பட்ட வார்த்தை அல்ல.

அந்த வார்த்தை அவரது பெயருக்கு முன்பு எப்போதும் இடம் பெறும் வார்த்தைதான். புரட்சித்தலைவி என்ற வார்த்தை முதலமைச்சரை புகழ்வதற்காக இந்த விளம்பரத்தில் பயன்படுத்தப்படவில்லை. எனவே, இந்த வார்த்தையை விளம்பரத்தில் இடம்பெறச் செய்தது, உச்ச நீதிமன்றம் தன் தீர்ப்பில் கூறியுள்ள விதிமுறைகளை மீறியதாக கூறுவதை ஏற்கமுடியாது. இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று முடிவு செய்து தள்ளுபடி செய்கின்றோம்” என்று கூறி உள்ளனர்.

Leave a Reply