shadow

13

 

மஞ்சளை ‘ஏழைகளின் குங்குமப்பூ’ என்பார்கள். விலை உயர்ந்த குங்குமப்பூ தரும் பலன்களைக் குறைந்த விலையில் கிடைக்கும் மஞ்சள் தருகிறது. இந்தியாவின் மிகப் பழமையான நறுமணப் பொருள் இது.

அழகு, ஆரோக்கியம், ஆன்மிகம் என மூன்றும் கலந்த முத்தான மூலிகை மஞ்சள். இதன் அறிவியல் பெயர், ‘கர்க்குமா லாங்கா’ (Curcuma longa). இதில் உள்ள ‘கர்க்குமின்’ (Curcumin) என்ற வேதிப் பொருள்தான் மஞ்சள் நிறத்தைத் தருவதோடு, மஞ்சளின் நற்பலன்கள் அனைத்துக்கும் காரணியாகவும் விளங்குகிறது. மஞ்சளின் மருத்துவக் குணங்கள்பற்றி சித்த மருத்துவர் வீரபாபு விளக்கமாகப் பேசினார்.

‘கப்பு மஞ்சள், கறி மஞ்சள், மர மஞ்சள், விரலி மஞ்சள், கஸ்தூரி மஞ்சள் என மஞ்சளில் பல வகைகள் உள்ளன. கப்பு மஞ்சள், புண்களை ஆற்றும்; சொறி, சிரங்கு, படை ஆகியவற்றுக்கு மேற்பூச்சாகவும் பூசலாம். கறி மஞ்சள் என்பது நாம் சமையலுக்குப் பயன்படுத்துவது. விரலி மஞ்சளைப் பொடிசெய்து, தினமும் பாலில் கலந்து குடித்துவந்தால், சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைத்திருக்கலாம். மர மஞ்சளை வேப்பிலையுடன் சேர்த்து அரைத்துப் பூச, அம்மை நோய் குணமாகும். கஸ்தூரி மஞ்சள் அழகுக்காகப் பயன்படுத்தப்படுவது.

காய்கறி, கீரையுடன் மஞ்சளைச் சேர்த்துச் சமைக்கும்போது, புழு, பூச்சிகள் அழிக்கப்பட்டுவிடும்.

மஞ்சளும் சந்தனமும் கலந்து முகத்துக்குப் பூசிவந்தால், மினுமினுப்பு ஏறும். கரும்புள்ளிப் பிரச்னை இருக்காது.

மஞ்சள் மிகச் சிறந்த கிருமி நாசினி. எனவேதான், வீட்டைச் சுற்றிலும் மஞ்சள் கலந்த நீரைத் தெளிப்பார்கள். இதனால் பாக்டீரியா, பூஞ்சைத் தொற்றுக்கள் பரவாது.

வெயிலில் அலைவதால் சிலருக்குத் தலையில் நீர் கோத்துக் கடுமையான தலைவலி ஏற்படும். மஞ்சளைத் தணலில் போட்டு, கரியாக்கும்போது வெளிவரும் புகையை நுகர்ந்தால், நீர்க்கோவை சரியாகும்.

வீக்கத்தைக் குறைக்கும். காயங்களை ஆற்றும்.

 புற்றுநோய்க் கட்டிகள் உருவாகாமல் தடுக்கும் ஆற்றல் மஞ்சளுக்கு இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர்.

அருகம்புல்லுடன் மஞ்சளைச் சேர்த்து அரைத்து வியர்க்குரு மற்றும் வேனல் கட்டிகளில் தடவி, இரண்டு மணி நேரம் கழித்துக் குளிக்க வேண்டும். இதுபோல் தொடர்ந்து செய்துவர சில நாட்களில் தொல்லை நீங்கும்.

மஞ்சள்தூளைப் போட்டுக் காய்ச்சிய நீரில் வாய் கொப்பளிக்க, தொண்டைப்புண் ஆறும். சளிப் பிரச்னையும் சரியாகும்.

பிரசவத்துக்குப் பிறகு பெண்கள் தங்களுடைய உணவில் மஞ்சளைச் சற்றுக் கூடுதலாகச் சேர்த்துக்கொள்வது நல்லது. கர்ப்பக் காலத்தில் வயிற்றில் ஏற்பட்ட தளர்ச்சி குறைந்து, வயிறு இறுக இது உதவுகிறது.

குளவி, தேனீ போன்றவை கொட்டினால், வலி – கடுப்பு ஏற்படும். மஞ்சளுடன் வேப்பிலையைச் சேர்த்து அரைத்துக் கொட்டிய இடத்தில் பூசினால் விஷம் முறியும்; வலி குறையும்.

தீப்புண் ஏற்பட்டால் சிறிது வெங்காயச் சாற்றுடன் மஞ்சள்தூளைக் குழைத்துப் பூசினால் குணமாகும்.

சாதம் வடித்த நீரில் சிறிது மஞ்சள்தூளைக் கலந்து குடித்தால் வயிறு உப்புசம் சரியாகும்.

சம அளவு மஞ்சளையும் மிளகையும் அரைத்து மோரில் கலந்து குடித்தால், பெண்களுக்கு மாதவிடாய்க் காலங்களில் உண்டாகும் வயிற்று வலி கட்டுப்படும். தலைவலி குணமாகும்.

மஞ்சளையும் சந்தனத்தையும் சம அளவில் அரைத்துப் பருக்களின் மீது தடவிவந்தால், சில நாட்களிலேயே பருக்கள் மறைந்துவிடும்.

அடிபட்ட காயங்களின் மீது மஞ்சளைப் பூச, ரத்தம் வெளியேறுவது தடுக்கப்படும்.

மஞ்சள் பூசினால் முடி உதிருமா?

‘பெண்கள் முகத்துக்கு மஞ்சள் பூசிக் குளிப்பதால்தான் அவர்களது முகத்தில் மீசை, தாடி வளர்வதில்லை’ என்ற நம்பிக்கை கிராமப்புறங்களில் உண்டு. இதனால் ஆண்கள் முகத்தில் மஞ்சள் பூசப் பயப்படுவார்கள். ஆனால், மஞ்சளுக்கும் முடி உதிரலுக்கும் சம்பந்தமே இல்லை என்பதுதான் உண்மை. பெண்களுக்கு முகத்தில் முடி வளர்வது என்பது ஹார்மோன்களால் ஏற்படுவது.

பிறகு ஏன் பெண்கள் முகத்தில் மஞ்சள் பூசிக் குளிக்கிறார்கள்?

மஞ்சள் ஓர் அழகுசாதனப் பொருள். சருமத்தைப் பொலிவாக்கும் ஆற்றல் மஞ்சளுக்கு உண்டு. எனவேதான் பெண்கள் மஞ்சள் பூசிக் குளிக்கிறார்கள். ஆனால், இன்றைக்கு அந்தப் பழக்கம் வெகுவாகக் குறைந்துவிட்டது. அதற்குப் பதிலாக மஞ்சள் சேர்க்கப்பட்ட அழகு க்ரீம்களைப் பயன்படுத்துகிறார்கள். காசு அதிகம் கொடுத்து ரசாயனங்களுடன் சேர்க்கப்பட்ட மஞ்சளைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, இயற்கையாகக் கிடைக்கும் மஞ்சளைப் பயன்படுத்தியே அழகைப் பெறலாமே!

Leave a Reply