Palani Murugan Temple in Pazhani Tamilnadu Indiaபழனி நகர் சங்க காலப் பெருமையுடைய மிகப் பழமையான நகரம் ஆகும். சங்க இலக்கியங்கள் பழனி மலையை பொதினி என்றே குறிப்பிடுகின்றன. பொதினி   என்ற பெயர்தான் பழனி என்று மருவிற்று என்று வரலாற்று அறிஞர்கள் கருதுகின்றனர். சங்க இலக்கியங்களில் ஒன்றான திருமுருகாற்றுப்படை பழனி தலத்தில் அமைந்துள்ள ஆவினன்குடியை மூன்றாம் படை வீடாகக் குறிப்பிடுகின்றது. பழனி திருத்தலம் முற்காலத்தில் கொங்கு நாட்டின் தெற்கு எல்லையாக விளங்கி வந்துள்ளது. பழனி பகுதியைக் கல்வெட்டுக்கள் வையாபுரி நாடு என்றே குறிப்பிடுகின்றன. இவ்வையாபுரி நாட்டை வையாபுரிக்கோப்பெரும் பேகன் என்ற மன்னன் ஆண்டு வந்துள்ளான். முற்காலத்தில் சித்தர்கள் பலர் வையாபுரி நாட்டில் வாழ்ந்துள்ளனர்.

பழனித் தலத்தின் பெருமை
palani 1
தொன்மையும், பெருமையும் வாய்க்கப் பெற்றது பழனித் தலமாகும். பழனித்தலத்தின் பெருமையினை அருணகிரி நாதர் திருப்புகழிலும், கந்தர் அலங்காரத்திலும் குறிப்பிட்டுள்ளார். பதினாலுலகோர் புகழ் பழனி மாமலை மீதினிலேயுறை பெருமாளே என்று பதினாலுலகும் போற்றும் தலம் பழனி என்கிறார். காசியின் மீறிய பழனாபுரி என்று காசியை விட சிறந்த தலம் பழனி என்றும் அதிசயம் அனேகமுற்ற பழனி மலை என்றும் அருண்கிரி நாதர் பழனித் தலத்தின் சிறப்பை பற்றித் திருப்புகழில் எடுத்துரைத்துள்ளார். புண்ணிய ஸ்தலமான பழனிக்கு நான் முதலிலேயே வந்து வழிபடவில்லையே என அருணகிரி நாதர் உனது பழனிமலையெனும் ஊரைச் சேவித் தறியேனே என்று மனம் உருகிப் பாடுகின்றார்.
மலைக் கோயில் பற்றி…

முருகப் பெருமானின் ஆறு படை வீடுகளில் மூன்றாம் படை வீடான பொதினி எனும் பழனி குன்றின் மீது அமைந்துள்ளது. பழனி மலை கோயில் கடல் மட்டத்திலிருந்து 1500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த குன்றின்மீது அமைந்துள்ள முருக கடவுளின் திரு உருவம் ஒன்பது வகையான நவபாஸாணங்களைக் கொண்டு போகர் எனும் சித்தரால் நிறுவப்பட்டதாகும்

போகரைப் பற்றி…

header-bhogar-navapashanamசித்தர் போகர் தமிழ் நாட்டு வேட்கோவர் வகுப்பைச் சார்ந்தவர். சர்வ சாத்திரங்களையும் கற்றுத் துறை போகியவர். அது காரணம் பற்றியே அவர் போகர் என்று அழைக்கப்பட்டார். இவர் காலாங்கி முனிவரின் சிறந்த மாணவர் ஆவர். காய கல்ப மூலிகைகளைப் பயன்படுத்தி காயசித்தி செய்து கொண்டவர். உலக மொழிகள் பலவற்றையும் அறிந்திருந்தார். பல நாடுகளுக்கும் சென்று நம் நாட்டு வைத்திய, யோக முறைகளை திக்கெட்டும் பரப்பியவர். ஆயிரத்து எழுநூறு பாடல்களால் ஒரு நிகண்டு செய்தவர்.

இடைக்காடர், கருவூரார், புலிப்பாணி, கொங்கண்ர் ஆகியோர் போகரிடம் அஷ்டமா சித்துகளைப் பயின்றனர். போகர் தமது மாணாக்கர்களுடன் சீனதேசம் சென்று பல கருவி நூல்களும், இயந்திர நூல்களும் இயற்றி அங்குள்ளவர் அறிவியல் ஞானம் பெறச் செய்தார். சிலகாலம் கழித்து தமிழ் மண்ணுக்குத் திரும்பியவர், பழனியில் வாழ்ந்தார்.

நவபாஷாணங்களின் சேர்க்கையில் பழனி மலை முருகன் சிலையை உருவாக்கினார். இவரது மருத்துவ ஞானம் அளவற்றது. இவருடைய வைத்திய நூல்களில் நிகண்டு, வைத்தியம், துவாத காண்டம், சப்ப காண்டம், வைத்திய சூத்திரம், ஆகியவையும், ஆன்மீகத்தில் ஞான் சூத்திரம், அட்டாங்க யோகம், ஞான சாராம்சம் ஆகியவையும் குறிப்பிடத்தக்கது.
போகரின் சமாதி…
 
போகரின் சமாதி பழனி மலையில் உட் பிரகாரத்தில் அமைந்துள்ளது. இங்கே போகர் பூஜித்து வந்த நவ துர்கா, புவனேஸ்வரி, மற்றும் மரகதலிங்கம் சிலைகளுக்கு தினசரி பூஜைகள் நடை பெற்று வருகிறது.
 

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *