சமீபத்தில் நைரோபி நாட்டில் ஒரு ஷாப்பிங் மாலில் புகுந்த தீவிரவாதிகள் அப்பாவி மக்கள் 60 பேரை சுட்டுக் கொன்றனர். இதே பாணியில் மும்பையிலும் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியிருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது.

பண்டிகை காலத்தில் இது போன்று தாக்குதல் நடத்தி மக்களிடையே பீதியை ஏற்படுத்த தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாகவும் குறிப்பாக மும்பையில் மக்கள் அதிகம் கூடும் மால்கள், ஷாப்பிங் வளாகங்களுக்கு தீவிரவாதிகள் குறிவைத்திருப்பதாகவும் உளவுத்துறை எச்சரிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கை தகவல் கிடைத்ததை தொடர்ந்து மாநில உள்துறை அமைச்சர் ஆர்.ஆர். பாட்டீல், உயர் போலீஸ் அதிகாரிகளை அழைத்து நகரில் செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினார். ஷாப்பிங் மால்கள் மட்டுமல்லாது முக்கியமான வழிபாட்டுத்தலங்கள், மக்கள் அதிகம் கூடும் மார்க்கெட் பகுதிகளிலும் பாதுகாப்பை பலப்படுத்துமாறு ஆர்.ஆர்.பாட்டீல் போலீஸ் அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து, போலீசார் மும்பையில் உள்ள முக்கியமான ஷாப்பிங் மால்களில் செய்யப்பட்டிருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்து வருகின்றனர். அனைத்து ஷாப்பிங் மால்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதை போலீசார் கட்டாயமாக்கி உள்ளனர்.

Leave a Reply