shadow

திரைப்படமாகும் ஜார்ஜ் பெர்னாண்டஸ் வாழ்க்கை வரலாறு

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்பட பல முக்கிய அரசியல் புள்ளிகளின் திரைப்படங்கள் உருவாகியுள்ள நிலையில் தற்போது முன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மராத்தி மற்றும் இந்தி மொழிகளில் உருவாகும் இந்த படத்தை சிவசேனா மூத்த தலைவரும், எம்.பி.யுமான சஞ்சய் ரவுத் இயக்க உள்ளார். இப்படத்துக்கான நடிகர்-நடிகைகள், இதர தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

கர்நாடக மாநிலம் மங்களூருவை சேர்ந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ் மும்பைக்கு பிழைப்புக்காக வந்தவர். ரயில்வே துறையில் பணியாற்றிய இவர் அந்த காலத்தில் பல்வேறு போராட்டங்களை நடத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர். 1967-ம் ஆண்டு மும்பை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன் பின்னர் அகில இந்திய ரெயில்வே தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவராக உயர்ந்தார். 1974-ம் ஆண்டு அவரது தலைமையில் நடந்த நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டம் இன்றளவும் நினைவுகூரத்தக்கது.

1998-2004-ம் ஆண்டு காலகட்டத்தில் வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசில் ராணுவத்துறை அமைச்சராக பதவி வகித்தார். இவரது காலத்தில்தான் இந்தியா-பாகிஸ்தான் இடையே கார்கில் போர், பொக்ரான் அணுகுண்டு சோதனை ஆகியவை நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply