தமிழக சட்டசபை வரும் 23ம் தேதி கூடுகிறது. இதற்கான உத்தரவை தமிழக கவர்னர் ரோசய்யா இன்று பிறப்பித்தார்.
நடப்பு ஆண்டில் கடந்த பிப்ரவரி 2ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் கவர்னர் ரோசய்யா உரையாற்றினார். அதன்பின் பிப்ரவரி 8ம் தேதி வரை கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்று கூட்டம் முடிந்தது. அதன்பின் பட்ஜெட் கூட்டம் மார்ச் 23ம் தேதியில் இருந்து மே மாதம் 16ம் தேதி மொத்தம் 41 நாட்கள் நடைபெற்றது. அடுத்த சட்டப்பேரவை கூட்டம் 6 மாதத்துக்குள் கூட்டப்பட வேண்டும். இந்நிலையில் தமிழக சட்டசபை கூட்டம் வரும் 23ம் தேதி நடைபெறும் என்று கவர்னர் ரோசய்யா உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து கவர்னர் இன்று காலை வெளியிட்டுள்ள உத்தரவில், தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் வரும் 23ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும் என்று கூறியுள்ளார்.  அதன்படி வரும் 23ம் தேதி சட்டசபை கூட்டம் நடைபெறும். கூட்டம் முடிந்ததும், சபாநாயகர் தனபால் தலைமையில், அலுவல் ஆய்வு குழு கூடி சட்டசபை கூட்ட தொடரை எத்தனை நாட்களுக்கு நடத்தலாம் என்று முடிவு செய்யப்படும். அதிகபட்சமாக ஒரு வாரம் கூட்டத்தொடர் நடைபெறும் என்று கூறப்படுகிறது.
டிசம்பர் 4ம் தேதி ஏற்காடு தொகுதியில் இடைத்தேர்தல் மற்றும் அடுத்த ஆண்டு மே மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில் இந்த சட்டசபை கூட்ட தொடர் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புத்தூரில் தீவிரவாதிகள் பிடிபட்டது, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

மேலும் தமிழகத்தில் தொடர்ந்து ஏற்பட்டு வரும் மின்வெட்டு, அரசின் நலத் திட்டங்களுக்கு ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டை, புதிய திட்டங்கள் குறித்தும் எதிர்க்கட்சிகள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க உள்ளனர். குறிப்பாக தேமுதிகவில் இருந்து 6 மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்எல்ஏக்களின் பதவி நீக்க காலம் முடிந்து விட்டது. அவர்களும் வரும் 23ம் தேதி நடைபெறும் சட்டசபை கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *