வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே 40 அடி உயரம் கொண்ட கோவில் கோபுரம் இடிக்கப்படாமல் நகர்த்தப்பட்டது. நவீன தொழில்நுட்பத்தில் நடந்துவரும் இந்த பணியால் 300 ஆண்டு பழமையான கோவில் கோபுரம் சேதமின்றி தப்பியது.

ஆம்பூரை அடுத்துள்ள அய்யனூர் என்ற கிராமத்தில் ஸ்ரீஆதி பெத்தபலி அம்மன் என்ற கோவில் உள்ளது. இந்த கோவில் சுமார் 300ஆண்டுகள் பழமையானது. இந்த கோவிலில் 40 அடி உயரம் கொண்ட கோபுரம் ஒன்று உள்ளது. இந்த கோவில் அமைந்துள்ள சென்னை-பெங்களூர் சாலை விரிவாக்கம் காரணமாக இந்த கோபுரத்தை அகற்ற தேசிய நெடுஞ்சாலை துறை (NHAI ) முடிவு செய்தபோது அதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் கிராம மக்கள் ஒன்றுகூடி நவீன தொழில்நுட்பத்தில் இந்த கோபுரத்தை 50அடி தூரத்திற்கு நகர்த்த முடிவு செய்யப்பட்டது.

இந்த கோவில் கோபுரத்தை நகர்த்தும் பணியை அரியானா மாநிலத்தை சேர்ந்த தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்க கிராம மக்கள் முடிவு செய்தனர். இதற்காக ரூ.3 லட்சம் அந்த நிறுவனத்திற்கு கிராம மக்கள் வசூல் செய்து கொடுத்தனர்.

300 சதுர அடி பரப்பளவு கொண்ட இந்த கோபுரத்தின் அடியின் முதலில் ஜாக்கிகள் பொருத்தும் பணி நடைபெற்றது. பின்னர் அந்த ஜாக்கிகளை கட்டைகள் மேல் வைத்து ரயில் தண்டவாளம் போல அமைக்கப்பட்டது. நேற்று மாலை இந்த கோபுரத்தை நகர்த்த ஏற்கனவே செய்து வைத்திருந்த ரயில் தண்டவாளம் போன்ற ஜாக்கிகளை கோபுரத்தின் அடியில் சொருகி, பின்னர் ஜாக்கிகள் இழுக்கப்பட்டது. இதனால் சுமார் அரை அடி தூரம் கோபுரம் நகர்ந்துள்ளது. ஒவ்வொரு நாளும் சிறிது சிறிதாக நகர்த்தி 10 நாட்களில் ஏற்கனவே தயார் செய்து வைத்திருக்கும் புதிய அஸ்திவாரத்தில் இந்த கோபுரம் வைக்கப்படும் என பணியாளர்கள் தெரிவித்தனர். கோபுரம் நகர்த்தும் பணியை வேடிக்கை பார்க்க ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கூடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply