வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை நேற்று தொடங்கியுள்ளது. அத்துடன் வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியுள்ளதால் தமிழ்நாட்டில் இன்று அநேக இடங்களில் மழை பெய்யும் என்றும், சில இடங்களில் மிக கன மழை பெய்யும் என்றும் வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.
தமிழ் நாட்டின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யக்கூடிய வடகிழக்கு பருவமழை நேற்று தொடங்கி உள்ளது. இந்த வருடம் சராசரி மழையை தமிழகத்திற்கு கொடுக்கும் என்று ஏற்கனவே வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து சென்னை வானிலை மண்டல ஆராய்ச்சி இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் இன்று கூறியதாவது:- இந்தியா முழுவதும் பெய்து வந்த தென்மேற்கு பருவமழை முடிந்துவிட்டது. அதே நேரத்தில் அதற்கு பதிலாக வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. இந்த தகவல் வானிலை இலாகா சார்பில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளா மற்றும் அதனுடன் சார்ந்த ஆந்திரா, கர்நாடகா பகுதிகளிலும் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. வடகிழக்கு பருவமழை தமிழ்நாடு, ஆந்திர மாநில கடலோர பகுதி ஆகிய இடங்களில் தீவிரம் அடைந்துள்ளது.அத்துடன் இலங்கை அருகே வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரம் அடைந்து தென்மேற்கு வங்க கடலில் தமிழ்நாட்டின் வடக்கு மற்றும் ஆந்திராவில் தெற்கு கடலோர பகுதியில் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் நேற்று முன்தினம் அநேக இடங்களில் மழை பெய்துள்ளது.இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் அநேக இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் கன மழை முதல் மிக கனமழை வரை பெய்யும். அதே நேரத்தில் உள் மாவட்டங்களிலும் சில இடங்களில் கனமழை பெய்யும். இவ்வாறு எஸ்.ஆர்.ரமணன் தெரிவித்தார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *