புத்தூரில் பிடிப்பட்ட தீவிரவாதி பன்னா இஸ்மாயிலுக்கும் காவல்துறையினருக்கும் இடையே நடந்த சண்டையில் குண்டடி பட்டு தற்போது மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் உள்ளார்.

ஆந்திர மாநிலம் புத்தூரில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளை, போலீசார் நேற்று சுற்றி வளைத்தனர். அவர்கள் தங்கி இருந்த வீட்டுக்குள் இன்ஸ்பெக்டர் லட்சுமணன் அதிரடியாக புகுந்தார். அப்போது தீவிரவாதிகள் அவரை உள்ளே இழுத்து அரிவாளால் வெட்டினார்கள். தீவிரவாதிகள் கையில் சிக்கிகொண்ட லட்சுமணைனை மீட்கவும், தீவிரவாதிகளை பிடிக்கவும் போலீசார் ஜன்னல் வழியாக வீட்டுக்குள் ஒரு ரவுண்டு சுட்டனர். இதில் தீவிரவாதி பன்னா இஸ்மாயில் வயிற்றில் குண்டு பாய்ந்தது.
அவனை போலீசார் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட பன்னா இஸ்மாயில் வயிற்றில் பாய்ந்து இருந்த குண்டை ஆபரேஷன் மூலம் அகற்ற டாக்டர்கள் முடிவு செய்தனர். ஆனால் துப்பாக்கி குண்டு பெருங்குடலில் பாய்ந்து இருப்பதால் அதை இப்போது அகற்றினால் உயிருக்கு ஆபத்து ஏற்படும். எனவே உடல் நலம் தேறிய பின்பு குண்டை ஆபரேஷன் செய்து அகற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது அவனுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். வெளிநபர்கள் யாரும் பன்னா இஸ்மாயிலை தொடர்பு கொள்ளமுடியாத அளவுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அவர் சிசிச்சை பெறும் வார்டில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். ஆஸ்பத்திரி வளாகத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆஸ்பத்திரிக்கு வருபவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறார்கள்.

பன்னா இஸ்மாயில் ஆஸ்பத்திரியில் இருப்பதால் வேலூர் மாஜிஸ்திரேட்டு சென்னை ஆஸ்பத்திரிக்கு வந்து நேரில் விசாரித்து காவல் நீடிப்பு வழங்க உத்தரவிடுவார் என்று தெரிகிறது.

Leave a Reply