shadow

13

திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ததால் மூன்று ஆண்டுகாலம் வனவாச தண்டனை பெற்று அதன் பின்னர் அம்மாவின் தயவில் விடுதலை பெற்ற வடிவேலுக்கு அரசியல் ரீதியான தொல்லைகள் முடிந்தும், மொழி ரீதியான தொல்லைகளும் தொடர்ந்தன. கிருஷ்ணதேவராயர் மீது திடீர் பாசம் கொண்ட சில தெலுங்கு அமைப்புகளும் வடிவேலுவை வைத்து சிலநாட்கள் விளையாட்டு காட்டி, தங்கள் அமைப்பை வெளியுலகுக்கு விளம்பரப்படுத்திக் கொண்டன. இவ்வாறு தடைபல கண்டு வெற்றிகரமாக வெளியாகியுள்ள தெனாலிராமன் எப்படி இருக்கிறார் என்று பார்ப்போம்.

தனது மந்திரிசபையில் உள்ள ஒன்பது அமைச்சர்களூம் குறுநில மன்னன் ராதாரவியுடன் இணைந்து துரோகம் செய்வதையே அறியாமல் அந்தரப்புரமே கதியென்று சுகமாக வாழ்க்கையை நடத்துகிறார் மன்னர்.

அப்பாவி மன்னரை ஏமாற்றி சீன அரசிடம் வியாபாரம் செய்ய ஒப்புக்கொள்ள வைக்கின்றனர் அவரது மந்திரிகள். நாடும் மக்களும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று மந்திரிகள் சொல்வதை நம்பி ஏமாந்து, 36 மனைவிகளுடன் ஜாலியான வாழ்க்கையை வாழ்கிறார் மன்னர். அவரை திருத்தி அவர் மந்திரிகள் செய்யும் துரோகத்தை வெளிப்படுத்துகிறார் புதிதாக வந்த ஒரு புத்திசாலி மந்திரி.

சீனாவுக்கு சென்ற தனது மந்திரி ஒருவர் எதிர்பாராதவிதமாக கொல்லப்படவே, அவருக்கு பதிலாக புதிய மந்திரியை தேர்ந்தெடுக்கிறார் மன்னர். அவர்தான் தெனாலிராமன். புத்திசாலியும், மன்னருக்கு விசுவாசமாக இருக்கும் தெனாலிராமன், மன்னருக்கு எதிராக சதிசெய்யும் மந்திரிகளை சமாளித்து, மன்னரை எப்படி காப்பாற்றுகிறார்கள் என்பதை நகைச்சுவையுடன் சொல்லியிருக்கும் படம்தான் தெனாலிராமன்.

தெனாலிராமன் கதையில் வரும் சின்னசின்ன சிறுகதைகளை மிகச்சரியான இடங்களில் ஒன்று சேர்த்து திரைக்கதை அமைத்த இயக்குனரை நிச்சயம் பாராட்டலாம். சீரியஸாக மட்டும் கதையை கொண்டு செல்லாமல் இடையிடையே பிளாஷ்பேக் நகைச்சுவையை காட்டி போரடிக்காமல் கொண்டு சென்ற இயக்குனருக்கு பாராட்டுக்கள்.

மூன்று வருடங்களுக்கும் பின்னர் நடிக்க வந்தாலும், இன்னும் தன்னால் முன்புபோல நகைச்சுவையில் ஜொலிக்க முடியும் என்பதை நிரூபித்து இருக்கிறார் வடிவேலு. பல இடங்களில் இம்சை அரசனை நினைவு படுத்தினாலும், இடையிடையே கொஞ்சம் வித்தியாசத்தை காட்டி சமாளித்ததில் அவரது அனுபவம் பளிச்சிடுகிறது.

இளவரசி வேடத்திற்கு மிகபொருத்தமாக இருக்கும் மீனாட்சி தீட்சித் நடிப்பைவிட கிளாமருக்குத்தான் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்.இவரை பற்றி சொல்வதற்கு இந்த படத்தில் வேறு எதுவும் இல்லை.

மன்னரின் அமைச்சர்களாக வரும் ஒன்பது மந்திரிகளும் செய்யும் திகிடுதத்தங்கள் காமெடி கலந்த ஆச்சரியம். அதிலும் ஒரு மந்திரியாக வரும் மனோபாலா அட்டகாசம். அமைதியாக டலயாக் பேசி அட்டகாசமாக நடிப்பை தந்திருக்கிறார். குறுநில மன்னராக வரும் ராதாரவியின் வேடம் மிகப்பொருத்தம். படத்தில் சிறிது நேரமே வந்தாலும், தேவதர்ஷினி செய்யும் நகைச்சுவை நல்ல கலகலப்பு. தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகை இல்லாத குறையை இவர் பூர்த்தி செய்துவிடுவார் என்றே தோன்றுகிறது.

ஒளிப்பதிவு, பாடல், பின்னணி இசை என்று எல்லாம் டீமும் கடுமையாக உழைத்திருப்பதை படத்தில் காண முடிகிறது. இடைவேளை வரை படம் கொஞ்சம் மெதுவாக நகர்வதை தவிர்த்திருக்கலாம். திடீர் திருப்பங்கள் எதுவும் இல்லாமல் சாதாரணமாக திரைக்கதை நகர்வதும் ஒரு மைனஸ் பாயிண்ட். பழம்பெரும் வசனகர்த்தா ஆரூர்தாஸின் வசனங்கள் பல இடங்களில் கைதட்டல் பெறுகிறது.

இம்சை அரசன் அளவுக்கு கலகலப்பு இல்லை என்றாலும் வடிவேலுவுக்காக ஒருமுறை பார்க்கலாம்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *