shadow

temple

கோபமே ஒருவனுக்குச் சத்ரு. கோபத்துக்குப் பெயர் பெற்ற துர்வாச முனிவர், ஆரண்ய க்ஷேத்திரத்துக்கு அருகில் வன்னி, இலுப்பை மற்றும் வில்வ மரங்கள் சூழ்ந்த இடத்தில் பர்ணசாலை அமைத்து, தினமும் சிவபூஜை செய்து வழிபட்டார். அந்தத் தலம் கங்காபுரம். அங்கே உள்ள இறைவன் ஸ்ரீகங்காதீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில், கொழப்பலூர் அஞ்சலுக்கு உட்பட்ட கிராமம் கங்காபுரம். வேலூர் மாவட்டம் ஆரணியில் இருந்து சுமார் 13 கி.மீ. தொலைவிலும், சேத்பட் எனும் ஊரில் இருந்து சுமார் 12 கி.மீ. தொலைவிலும் உள்ள இந்தக் கிராமத்தில், ஸ்ரீபங்கஜவல்லி சமேதராக வீற்றிருக்கிறார் ஸ்ரீகங்காதீஸ்வரர்’ என்று, கடந்த 21.1.14 தேதியிட்ட சக்திவிகடன் இதழில், ‘ஆலயம் தேடுவோம்’ பகுதியில் எழுதியிருந்தோம்.

கோபத்தால் பலருக்கும் சாபம் கொடுத்து, ஈசனின் சாபத்துக்கு ஆளான துர்வாசர், இங்கே சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து, கடும் தவமிருந்தார். தினமும் சிவனாருக்கு அபிஷேகம் செய்து பூஜித்து வந்த துர்வாசர், ஒருநாள் விடிந்ததும் அருகில் உள்ள குளத்துக்குச் சென்றவர், அதிர்ந்து போனார்.

temple1

குளத்தில் ஒரு சொட்டு நீரைக்கூடக் காணோம். குளம் முழுவதுமாக வற்றிப் போயிருந்தது. ‘சிவனே, இதென்ன சோதனை! உன்னை அபிஷேகிக்க, நான் கங்கா ஜலமா கேட்டேன்? இந்தக் குளத்து நீரைத்தானே கேட்டேன். அதுவும் வற்றிப் போயிருக்கிறதே! எப்படி உனக்கு அபிஷேகம் செய்வேன்?’ என்று புலம்பினார் துர்வாசர்.

அப்போது பூமியில் இருந்து தண்ணீர், ஊற்றெனப் பொங்கி வந்தது. அதில் உடல் நனைந்தும், அகம் குளிர்ந்தும் போனார் துர்வாசர். ‘என் சிவனே! எனக்காக கங்காதேவியையே இங்கு வரச் செய்துவிட்டாயே! உன் கருணையே கருணை!’ என்று பூரித்துப் போனார்.

துர்வாச முனிவர் அன்றைக்கு வழிபட்ட சிவனாருக்குக் கோயில் கட்டப்பட்டது. ஆனால், இன்றைக்குக் கோயிலே காணாமல் போய், சந்நிதி முழுவதும் சிதைந்த நிலையில், வெட்டவெளியில்  வெயிலிலும் மழையிலும் காய்ந்தபடி இருக்கிறார் ஸ்ரீகங்காதீஸ்வரர் .

”கோயிலுக்குக் கும்பாபிஷேகம் நடந்து எப்படியும் 200 வருஷமாவது இருக்கும்னு சொல்றாங்க. அருள்மிகு கங்காதீஸ்வரர் திருக்கோயில் டிரஸ்ட்டுன்னு அமைச்சு, திருப்பணிகள் நடந்துக்கிட்டிருக்கு. ஆனா, நிதி தட்டுப்பாட்டால பணிகளில் தேக்கம்” என்று அறக்கட்டளை நிர்வாகி சுந்தரேசன் தெரிவித்திருந்ததையும் அந்தக் கட்டுரையில் சொல்லியிருந்தோம்.

அதையடுத்து, ஸ்ரீகங்காதீஸ்வரர் கோயிலுக்கு மளமளவென குவிந்தன நிதிகள். ஸ்ரீவிநாயகர், ஸ்ரீமுருகன், ஸ்ரீபெருமாள், ஸ்ரீபிரம்மா, ஸ்ரீலிங்கோத்பவர், ஸ்ரீதுர்கை, ஸ்ரீசண்டிகேஸ்வரர், நவக்கிரகங்கள் என விக்கிரகங்கள் செய்யும் பணி துரிதமாக நடந்தேறி, இப்போது விக்கிரகங்களும் சந்நிதிகளும் தயார் நிலையில்  உள்ளன.

”கங்கையே பெருக்கெடுத்து வந்ததால், காசிக்கு நிகரான தலம்னு சொல்லுவாங்க. அப்பேர்ப்பட்ட புண்ணிய தலத்துல, ‘கும்பாபிஷேகத்துக்குக் காத்திருக்கிறார் ஸ்ரீகங்காதீஸ்வரர்’னு தலைப்புல சக்தி விகடன்ல எங்க ஊர் கோயில் பத்தி வந்ததும், ஊர்மக்கள் எல்லாரும் சந்தோஷமாயிட்டோம். சக்திவிகடன் வாசகர்களோட பங்களிப்பால, இதோ… வர்ற ஏப்ரல் 13-ம் தேதி அன்னிக்கி, ஸ்ரீகங்காதீஸ்வரருக்குக் கும்பாபிஷேகம் நடக்கப் போகுது” என்று நெகிழ்ச்சியும் புன்னகையுமாகத் தெரிவிக்கிறார் சுந்தரேசன்.

”துர்வாசருக்கு சாப விமோசனம் அளித்த தலத்தில், காசிக்கு நிகரானது எனப் போற்றப்படும் ஸ்ரீகங்காதீஸ்வரர் கோயிலில், வருகிற 13.4.14 ஞாயிற்றுக் கிழமை அன்று, காலை 10 முதல் 11:30 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இந்த கும்பாபிஷேக பூஜையை நடத்தி வைக்கப் போகிறவர் வேறு யாருமல்ல, சக்தி விகடனில் ஆரம்பக் காலம் முதலே கேள்வி-பதில்  பகுதி மூலம் வாசகர்களின் ஆன்மிக ஐயங்களைப் போக்கி வரும் சேஷாத்ரி நாத சாஸ்திரிகள்தான்!” எனப் பெருமையுடன் தெரிவிக்கிறார்கள் கங்காபுரம் ஊர்மக்கள்.

”கோயில் திருப்பணிக்கு உதவிய சக்தி விகடன் வாசகர்களுக்கு எங்களின் மனம் கனிந்த நன்றி! வாசகர்கள் அத்தனை பேரும், நிம்மதியும் நிறைவுமாக வாழ, கங்காதீஸ்வரர் நிச்சயம் அருள்புரிவார்” என்று நெகிழ்ந்து சொல்கின்றனர் கிராம மக்கள். ஞாயிற்றுக்கிழமை நாளில்தான் கும்பாபிஷேகம். எனவே, குடும்பத்துடன் கங்காபுரம் சென்று கும்பாபிஷேக வைபவத்தைத் தரிசித்து, ஸ்ரீகங்காதீஸ்வரரின் பேரருளைப் பெற்று வாருங்கள்!

Leave a Reply