shadow

Kumar-TRS-PTIதெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அவர்களின் மகளும், நாடாளுமன்ற உறுப்பினருமான கவிதா, சமீபத்தில் ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டி ஒன்றில், இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகும் காஷ்மீரும், தெலுங்கானா பகுதியும் அந்தந்த மக்களின் விருப்பத்திற்கு எதிராக வலுக்கட்டாயமாக இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. நாங்கள் இந்தியர்கள் என்று கூற வேண்டிய அவசியமில்லை என்று கூறியிருந்தார்.

கவிதாவின் சர்ச்சைக்குரிய பேச்சு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதுகுறித்த புகார் ஒன்றை பாரதிய ஜனதா கட்சியின் சட்டப் பிரிவு அமைப்பாளர் கே.கருணா சாகர் ஐதராபாத் நகரில் உள்ள  தலைமை பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அவர் தன்னுடைய மனுவில், ‘‘கவிதாவின் பேச்சு பிரிவினையைத் தூண்டும் வகையில் உள்ளதால் அவர் மீது தேசத் துரோக சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரணை செய்த ஐதராபாத் நீதிமன்றம், ‘கவிதா மீது தேசத்துரோக சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய ஐதராபாத் காவல்துறைக்கு உத்தரவிட்டது. அவரிடம் விசாரணை செய்து, வரும் செப்டம்பர் 11ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே நேற்று நாடாளுமன்றத்தில் பேசிய கவிதா, தெலுங்கானாவும், ஜம்மு காஷ்மீரும் இந்தியாவின் ஒரு பகுதிதான் என்று கூறியுள்ளார்.

Leave a Reply