shadow

பணி நீக்கத்தை எதிர்த்து ராணுவ வீரர் மேல்முறையீடு

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ராணுவ வீரர்களுக்கு தரமற்ற உணவு வழங்குவதாக அரியானா மாநிலம் ரேவாரி பகுதியைச் சேர்ந்த தேஜ்பகதூர் யாதவ் என்ற எல்லைப் பாதுகாப்புப் படைப் பிரிவில் கான்ஸ்டபிள் குற்றச்சாட்டு ஒன்றை கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

ஜம்மு காஷ்மீர் மாநில எல்லைக்கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் தான் பணியாற்றியபோது, ராணுவத்தில் தரமற்ற உணவு வழங்குவதாகவும், தரமான பொருட்களை வெளிச்சந்தையில் விற்றுவிட்டு, தரமற்ற பொருட்களை அதிகாரிகள் பயன்படுத்துவதாகவும் அவர் வீடியோ ஒன்றினை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தார்

இதுகுறித்து டெல்லி உயர் நீதிமன்றத்திலும் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது. மேலும், ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் உணவு குறித்த குற்றச்சாட்டுக்கு உரிய விளக்கம் அளிக்குமாறு பிரதமர் அலுவலகமும் அறிவுறுத்தி இருந்தது.

இந்த நிலையில், தேஜ்பகதூர் யாதவ் மீது பாதுகாப்புப் படை வீரர்களுக்கான நீதிமன்றம் விசாரணை நடத்தியது. “எல்லைப் பாதுகாப்புச் சட்ட விதிகளை மீறி, அபாண்டமான குற்றச்சாட்டுகளை தேஜ்பகதூர் சுமத்தி இருப்பதாகவும், அவரது குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை” என்று கூறியதோடு தேஜ்பகதூர் யாதவை அதிரடி யாகப் பணி நீக்கம் செய்து உத்தரவிட்டது.

இதுகுறித்து தேஜ்பகதூர் யாதவ் கூறியபோது, “என் மீதான குற்றச்சாட்டு குறித்து நியாயமான விசாரணை நடைபெறவில்லை. என்னுடன் பணியாற்றும் சக வீரர்களை சாட்சிக்காக அழைக்க அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. பணி நீக்கத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வேன், என்று கூறினார்.

Leave a Reply