shadow

திமுக, அதிமுக இல்லாத கூட்டணி அமைப்பது எப்படி? தமிழருவி மணியன் யோசனை
tamilaruvi
வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுக இல்லாத புதிய கூட்டணி யோசனை ஒன்றை காந்திய மக்கள் இயக்க நிறுவனத் தலைவர் தமிழருவி மணியன் கூறியுள்ளார். தனது யோசனையின்படி அரசியல் கட்சிகள் நடந்தால் கண்டிப்பாக மக்கள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவார்கள் என்று அவர் கூறியுள்ளார். தே.மு.தி.க., பா.ம.க., ம.தி.மு.க., த.மா.கா. ம.ம.க., இடதுசாரிகள், தலித் அமைப்புகள் ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் வலிமையான கூட்டணி அமைத்து களம் காண வேண்டும் என்பதே அவரது யோசனை. ஆனால் அவரது யோசனை நடைமுறைக்கு ஒத்துவருமா? என்பது போகப்போகத்தான் தெரியும்

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது, “தமிழகத்தில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த முடியாது என்று மாநில அரசு திட்டவட்டமாக அறிவித்து விட்டது. மதுவிலக்கை படிப்படியாக கொண்டு வரும் நோக்கமும் இந்த அரசுக்கு இல்லை என்று புரிந்து விட்டது.

மக்கள் நலன் சார்ந்த சிந்தனைக்கும், நம் மாநில அரசுக்கும் எள்ளளவும் சம்பந்தமில்லை என்பது சந்தேகத்திற்கு இடமின்றி தெளிவாகி விட்டது. மக்களின் ஆர்ப்பாட்டங்களும், அழுகைக் குரல்களும், மதுவால் நிகழும் மரணங்களும் அ.தி.மு.க. அரசின் மனச்சான்றை தட்டி எழுப்ப முடியவில்லை.

மதுவைக் கொண்டு வந்தது தி.மு.க. மது வருவாயை பெரிதாக நம்பி அரசை நடத்துவது அ.தி.மு.க. இந்த இரு கட்சிகளையும் ஆட்சிப் பீடத்தில் இனி அமராமல் பார்த்துக் கொள்வதே மது விலக்கை நாடுபவர்களின் முதற்கடமையாக இருக்க வேண்டும்.

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று எல்லா எதிர்க்கட்சிகளும் வலிமையாகக் குரல் கொடுக்கின்றன.

மதுவால் தமிழகத்தைப் பாழ்படுத்திய இரு திராவிடக் கட்சிகளையும், தமிழினத்தை ஈழத்தில் அழிப்பதற்கு துணை நின்ற காங்கிரசையும், இந்துத்துவத்தை வெளிப்படையாக வேகப்படுத்தும் பா.ஜ.க.வையும் முற்றாக தவிர்த்து விட்டு தே.மு.தி.க., பா.ம.க., ம.தி.மு.க., த.மா.கா. ம.ம.க., இடதுசாரிகள், தலித் அமைப்புகள் ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் வலிமையான கூட்டணி அமைத்து களம் கண்டால், மக்கள் நலன் காக்க முனையும் இந்த கூட்டணியின் பக்கம் வாக்காளர்கள் தங்கள் பார்வையை நிச்சயம் திருப்புவார்கள்.

தேர்தல் முடிவு இரு திராவிடக் கட்சிகளுக்கும் எதிராக அமையும். தமிழகத்தில் புதிதாய் ஒரு கூட்டணி ஆட்சி மலரும். இந்த சமூகக் கடமையைச் செய்வதற்கு இக்கட்சிகள் அனைத்தும் முடிவெடுத்தால் உண்மையான மதுவற்ற மாநிலத்தை உருவாக்க இவை பூரணமாக பாடுபடுவதாய் நம்பலாம். இவை அனைத்தும் ஓர் அணியில் ஒன்றுபட்டு களம் அமைக்க காந்திய மக்கள் இயக்கம் எல்லா வகையிலும் தன் பங்களிப்பை தரத் தயாராக இருக்கிறது.

இதை செய்வதற்கு தவறினால் மதுவிலக்குக்கு குரல் கொடுக்கும் இந்த கட்சிகள் அனைத்தும் தனித்தனியாக நின்று அ.தி.மு.க.வே மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்து விடும்”

இவ்வாறு தமிழருவி மணியன் கூறியுள்ளார்.

Leave a Reply