shadow

rajapakse 1இலங்கை அதிபர் தேர்தலில் மகிந்தா ராஜபக்சே படுதோல்வி அடைந்தது குறித்து ஒட்டு மொத்த தமிழர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ உள்பட தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து கூறியுள்ளனர்.

மதிமுக பொதுச்செயல்லளர் வைகோ: இலங்கையில் தமிழர் பகுதிகளில் உள்ள ராணுவத்தை வெளியேற்ற வேண்டும் என்று வலியுறுத்திய வைகோ, இலங்கை சிறையில் உள்ள தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன்: ‘ராஜபக்சேவின் தோல்வி இலங்கை வாழ் தமிழ் மக்கள் மற்றும் ஒட்டுமொத்த தமிழர்களுக்கு கிடைத்த வெற்றி.

இலங்கை தமிழர்களுக்கு ராஜபக்சே ஆட்சியில் தொடர்ந்து இழைக்கப்பட்ட அநீதிக்கு மக்கள் தக்க பாடம் புகட்டி உள்ளார்கள். தமிழ் மக்களின் நியாயமான எண்ணங்களை பிரதிபலித்து செயல்படுத்தும் ஆட்சியாளர்களாக புதிய ஆட்சியாளர் செயல்படுவார்கள் என்று நம்புகிறேன்” என்று கூறினார்.

 பழ.நெடுமாறன்: இலங்கை தேர்தலில் ராஜபக்சேயின் வீழ்ச்சி மட்டுமே தமிழர்களுக்கு மகிழ்ச்சி அளிப்பது ஆகாது. கடந்த காலத்தில் பதவிகளில் இருந்த சிங்கள தலைவர்கள் எந்த கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் சிங்கள இனவெறியின் அடிப்படையில் தமிழர்களை ஒடுக்க வேண்டும் என்ற முறையில் ஆட்சி நடத்தினர். தமிழர்களை ஒடுக்குவதில் அவர்கள் போட்டி போட்டனர். வெற்றி பெற்று இருக்கிற சிறிசேன இதற்கு விதிவிலக்காக இருப்பார் என்பதை அவரது தேர்தல் கால பேச்சுக்கள் காட்டவில்லை.

இலங்கையில் ராஜபக்சே காலத்தில் நடைபெற்ற போர் குற்றங்களையும் இனப்படுகொலைகளையும் குறித்து விசாரணை நடத்த ஐ.நா. மனித உரிமை ஆணையம் அமைத்த ஆணையத்தை இலங்கைக்குள் அனுமதித்து சுதந்திரமாக விசாரணை நடத்த சிறிசேன அனுமதிக்க வேண்டும். தமிழர் பகுதியில் இருந்து சிங்கள ராணுவத்தை வெளியேற்ற வேண்டும். இந்த இரண்டையும் அவர் செய்தால் மட்டுமே தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல உலக நாடுகளுக்கும் அவர் மீது நம்பிக்கை பிறக்கும். இதை அவர் செய்ய வேண்டும் என சர்வதேச அழுத்தம் தொடர வேண்டும் என்று கூறினார்.

பொன்.ராதாகிருஷ்ணன்: “தமிழர்கள் விவகாரத்தில் துரோகம் செய்தவர்கள் தமிழகத்திலும், இலங்கையிலும் தோல்வி அடைந்துள்ளனர். இலங்கை தமிழர்களை பாதுகாக்கும் செயலில் தொடர்ந்து பா.ஜ.க. செயல்படும்” என்று தெரிவித்துள்ளார்.

ஜி.ராமகிருஷ்ணன்: “இலங்கையில் ராஜபக்சே தோல்வியின் மூலம் தமிழர் கூட்டமைப்பின் எண்ணம் வெற்றி பெற்றுள்ளது” என்று கூறியுள்ளார்.

Leave a Reply