shadow

jayalalithaதமிழகத்தில் கடந்த பத்து நாட்களாக பெய்த கனமழையால் பெரும்பாலான வீடுகளில் தண்ணீர் புகுந்து வீட்டில் உள்ள பல பொருட்கள் சேதமடைந்தன. குறிப்பாக மாணவர்களின் புத்தகங்கள், சீருடைகள், ரேஷன் கார்டு ஆகியவை மீண்டும் உபயோகப்படுத்த முடியாத அளவுக்கு சேதமடைந்தது. இந்நிலையில் மழைவெள்ளத்தால் சேதமடைந்த பள்ளிப் பாடப்புத்தகங்கள்,ரேசன் அட்டைகள் ஆகியவற்றுக்கு மாற்றாக புதிய பாடப்புத்தகங்கள்,சீருடைகள், நகல் ரேசன் அட்டை வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா இன்று அறிவித்துள்ளார்.  

இது குறித்து முதல்வர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:

” தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவித் தொகை வழங்கவும் மற்றும் உடனடி சீரமைப்புப் பணிகளுக்கும் என 500 கோடி ரூபாய்  ஒதுக்கி நான் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளேன்.

மழையால் பாதிக்கப்பட்ட பயிர்சேதங்களை ஆய்வு செய்து கணக்கெடுப்புக்குப் பின் இந்த ஆய்வின்  அடிப்படையில் பயிர் சேதங்களுக்கான இழப்பீடுகள் விவசாயப் பெருங்குடி மக்களுக்கு வழங்கப்படும் என்று நான் எனது 18.11.2015 அன்றைய அறிக்கையில் தெரிவித்திருந்தேன்.

மேலும், மழையால் பாதிக்கப்பட்ட குடிசைகள் மற்றும் வீடுகள் கணக்கெடுக்கும் பணி மற்றும் கால்நடை இழப்பு, படகுகள் இழப்பு ஆகியவையும் கணக்கிடப்பட்டு இந்த இழப்புகளுக்கான நிவாரணத் தொகையை விரைந்து வழங்கிட நான் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன் என்பதையும் எனது அறிக்கையில் தெரிவித்திருந்தேன்.

தமிழகத்தில் பெய்த  கன மழையால் சில பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்த காரணத்தால், மாணாக்கர்களின் பாடப் புத்தகங்கள் சேதமடைந்துவிட்டதாக தெரிய வந்துள்ளது. மாணாக்கர்களின் கல்விக்கு எனது அரசு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது. எனவே, மழை வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட மாணாக்கர்கள் அனைவருக்கும் விலையில்லா பாடப் புத்தகங்கள் மற்றும் நோட்டுப் புத்தகங்கள் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். மேலும், சீருடை ஒன்றும் வழங்கிட நான் உத்தரவிட்டுள்ளேன்.

இந்த கன மழை வெள்ளம் காரணமாக பலர் தங்களது பொது விநியோக குடும்ப அட்டைகளை இழந்து விட்டதாக நான் அறிகிறேன். அவ்வாறு குடும்ப அட்டைகளை இழந்தவர்களுக்கு நகல் அட்டைகளை, அதாவது duplicate அட்டைகளை உடனடியாக வழங்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply