shadow

மொழியை வைத்து பிழைப்பு நடத்தும் அரசியல் கட்சிகள்: தமிழிசை செளந்திரராஜன் காட்டம்

சென்னை ஐ.ஐ.டி.யில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு பதிலாக சமஸ்கிருதப்பாடல் பாடப்பட்டது குறித்த சர்ச்சை ழுந்துள்ள நிலையில் இதுகுறித்து கருத்து கூறிய பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்திரரஜன் தமிழகத்தில் இனிமேல் மொழி அரசியலை யாரும் செய்ய முடியாது என்று கூறியுள்ளார்

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: சென்னை ஐ.ஐ.டி.யில் சமஸ்கிருதப்பாடல் பாடப்பட்டது, மத்திய மந்திரிகள் கலந்து கொண்டதால் உள்நோக்கதத்தோடு பாடப்பட்டது என்று சொல்வது போல உள்ளது. தமிழ்நாட்டில் மத்திய மந்திரி அறிவித்த பல்வேறு திட்டங்களை மறைக்கும் நோக்கோடு இந்த பிரச்சினையை கிளப்பியுள்ளனர்.

தமிழ்நாட்டில் உள்ள எதிர்க் கட்சிகள் தங்களுக்கு தமிழ்பற்று இருப்பது போல காட்டிக்கொண்டு, வேண்டும் இதனை வைத்து அரசியல் செய்கிறார் கள். தமிழ்பற்று எப்படி அவர்களுக்கு இருக்கிறதோ அதைவிட பா.ஜனதாவை சேர்ந்த எங்களுக்கும் இருக்கிறது.

தமிழகத்தில் 2 நாட்களாக சுற்றுப்பயணம் செய்த மத்திய மந்திரி நிதின் கட்காரி கோடிக்கணக்கில் பல நல்ல திட்டங்களை அறிவித்து சென்றிருக்கிறார். 10 ஆயிரம் கோடி ரூபாயில் பசுமை சாலைகள் அமைத்தல், சாகர்மாலா திட்டத்தினால் தமிழக துறைமுகத்தில் அதிக வேலைவாய்ப்பு உருவாக்குதல், 24 கோடி ரூபாய் மதிப்பில் 52 ஆயிரம் சதுர அடியில் சரக்கு வாகன நிறுத்த முனையம், தூத்துக்குடி துறைமுகம் மேம்படுத்துவதற்கான அறிவிப்பு, கோதாவரி தண்ணீரை தமிழ்நாட்டுக்கு கொண்டு வரும் மாபெரும் திட்டத்தை கூறியிருப்பதுடன், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வேலை தொடங்கி இருப்பதாக கூறிவிட்டு சென்றிருக்கிறார்.

இதற்கு முந்தைய காங்கிரஸ் அரசைவிட பா.ஜனதா அரசு தமிழ்நாட்டிற்கு பல நல்ல திட்டங்களை அறிமுகப்படுத்துவதும், அதனை மத்திய மந்திரிகள் அறிவிப்பதும் அதிகரித்து இருக்கிறது.

ஆனால், மு.க.ஸ்டாலின் ஆட்சியில் பங்கெடுத்துக் கொண்ட காங்கிரஸ் அரசு எந்த ஒரு நல்ல தொலைநோக்கு திட்டத்தையும் எளிதாக தமிழகத்துக்கு வழங்கவில்லை. ஆனால் பா.ஜனதா ஆட்சிக்கு வந்தபிறகு தமிழ் புறக்கணிக்கப்படுவதாக மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.

மொழியை வைத்துக் கொண்டு மட்டுமே பிழைக்க முடியும் என்ற நிலையில் உள்ள தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ், கம்யூனிஸ்டு போன்ற கட்சிகள் இருப்பதால் அவர்கள் ஐ.ஐ.டி. மாணவர்கள் சுயமாக விரும்பி பாடிய பாடலை வைத்து அரசியல் செய்கிறார்கள்.

இப்போது, தமிழை மேன்மைபடுத்துகிறோம் என்று சொல்பவர்கள் மற்ற மாநிலத்தை போல மாநில மொழியை மேன்மைபடுத்தவில்லை என்பதை மக்கள் நன்கு அறிவார்கள். அதே போல் மக்கள் உருப்படியான அரசியல் எது, வெறுப்பு அரசியல் எது என்று கண்டறியக்கூடியவர்கள். தமிழ்நாட்டில் தமிழை வைத்து யார் அரசியல் செய்கிறார்கள் என்பது மக்களுக்கு தெரியும். இனிமேல் மொழி அரசியலை யாரும் செய்ய முடியாது என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு தமிழிசை செளந்திரராஜன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply