விஜயகாந்த்தின் தேமுதிக கட்சியை பாரதிய ஜனதா கூட்டணியில் சேர்த்துவைக்க காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் முயன்று வரும் வேளையில் நேற்று திமுக தலைவர் கருணாநிதி, தேமுதிக எங்கள் கூட்டணியில் சேர்ந்தால் மகிழ்ச்சி என்று கூறியுள்ளதால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தேமுதிக நடத்திய கிறிஸ்துமஸ் விழாவில் திமுகவின் முக்கிய தலைவர் எஸ்ரா சற்குணம் கலந்து கொண்டு விஜயகாந்த் திமுக கூட்டணிக்கு வரவேண்டும் என்று அழைப்பு விடுத்தார். இதற்கு விஜயகாந்த் தான் இதுகுறித்து பரிசீலிப்பதாக உறுதி கூறியுள்ளார். இந்நிலையில் பாரதிய ஜனதா கூட்டணியை வலுப்படுத்தி வரும் முயற்சியில் இருக்கும் தமிழருவி மணியன், விஜயகாந்த் திமுக கூட்டணியில் சேர்ந்தால் திமுக சுமக்கும் ஊழல் மூட்டையை அவரும் சேர்ந்து சுமக்க வேண்டிய நிலைவரும் என்றும், அத்தகையை தவறை விஜயகாந்த் செய்யமாட்டார் என தாம் நம்புவதாகவும் கூறியுள்ளார்.

பாரதிய ஜனதா கூட்டணியில் பாமகவும், மதிமுகவும் கூட்டணியில் சேர பேச்சுவார்த்தை முடிவடைந்துவிட்ட நிலையில் தேமுதிகவும் அந்த கூட்டணியில் சேர்ந்தால் பாரதிய ஜனதா கூட்டணி வெற்றிபெற நல்ல வாய்ப்பு உள்ளது என்றும், 2016ஆம் ஆண்டில் நடக்கும் சட்டசபை தேர்தலிலும் இந்த கூட்டணியே தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என்றும் தமிழருவி மணியன் மேலும் கூறினார்.

ஆனால் விஜயகாந்த் என்ன முடிவெடுப்பார் என்று மர்மமாகவே உள்ளது. அவர் திமுக பக்கம் சாய்வதாகவே அரசியல் விமர்சகர்கள் கணிக்கின்றனர். தமிழகத்தை பொறுத்தவரையில் திமுக, அல்லது அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்தால் மட்டுமே அதிக இடங்களை கைப்பற்ற முடியும் என்றும் மற்ற கட்சிகளுடன் கூட்டணி வைப்பது சரியான முடிவாக இருக்காது என்றும் விஜயகாந்தின் உறவினர்கள் அவருக்கு அறிவுரை கூறி வருகின்றனர்.

இந்நிலையில் ஜனவரியில் நடக்கவிருக்கும் தேமுதிக பொதுக்குழு கூட்டத்தில் கூட்டணி குறித்து இறுதிமுடிவு எடுக்கப்படும் என அக்கட்சியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply