இலங்கையில் உள்ள தமிழ்ப் பெண்களை ராணுவத்தில் இணையுமாறு கட்டாயப்படுத்தப்படுவதாக குறைகேட்கும் கூட்டத்தில் தமிழ்ப் பெண்கள் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டம், வட்டக்கச்சி புழுதி ஆற்றிலிருந்து மாயவனூர் கிராமத்தில் குறைகேட்கும் கூட்டம் ஒன்றில் வடக்கு மாகாண விவசாய அமைச்சர் ஐங்கரநேசன், மற்றும் மாகாணசபை உறுப்பினர் பசுபதிபிள்ளை ஆகியோர் சென்றிருந்தனர். விவசாயம் தொடர்பான குறைகளை அவர்கள் கேட்டுக்கொண்டு வந்தபோது, விவசாய பண்ணையில் வேலை செய்து வரும் பெண்கள் சிலர் “இலங்கை ராணுவத்தினர் தங்களை ராணுவத்தில் சேர கட்டாயப்படுத்தி வருவதாக கண்ணீருடன் தெரிவித்தனர். இதற்கு பதிலளித்த அமைச்சர் இதுகுறித்து மேலிடத்தில் தெரிவித்து அதற்குரிய நடவடிக்கை எடுக்க இருப்பதாக  கூறினார்.

போருக்குப் பின்னர் ராணுவத்தின் தேவையில்லை என்ற நிலையில் இவ்வாறு நிர்ப்பந்தமாக ஆட்சேர்ப்பு நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபடுவதை நிறுத்த வேண்டும் என்றும். இதனை ஒரு போதும் அனுமதிக்க முடியாது என்பதுடன் இந்த நடவடிக்கையினை வன்மையாகக் கண்டிக்கின்றேன் என்றும் அமைச்சர் ஐங்கரநேசன் கூறினார்.

மேலும், இது தொடர்பாக வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் அவர்களுடன் கலந்து ஆலோசிக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply