சமீப காலமாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் கூட கொலை, கொள்ளைகளில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

 

  •  நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வகுப்பறைக்குள் மாணவர்கள் ஒருவரையொருவர் ஆயுதங்களுடன் தாக்கி சாதி, மோதல்களில் ஈடுபடும் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது.
  • கடந்த சில மாதங்களுக்கு முன் பாளையங்கோட்டை அருகே உள்ள திடியூரில் உள்ள இன்ஜி. கல்லூரி மாணவர்கள் ஒருவரையொருவர் பயங்கர ஆயுதங்களுடன் தாக்கி கொண்டனர்.
  • மூன்றடைப்பில் உள்ள ஒரு கல்லூரியில் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் 3 மாணவர்களுக்கு கத்திக் குத்து விழுந்தது
  • நெல்லையில் 15 வயது சிறுமியை வீட்டுக்குள் பூட்டி வைத்து மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்த தனியார் கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
  • நெல்லை மாநகராட்சி தேமுதிக கவுன்சிலர் தானேஸ்வரன் என்பவரை அரிவாளால் வெட்டி கொல்ல முயன்ற வழக்கில் சுடர்மணி என்ற ஐடிஐ மாணவர் கைது செய்யப்பட்டார்.
  • நெல்லையில் அரசு பஸ்கள் மற்றும் பெருமாள்புரம் போலீஸ் நிலையத்தை அடித்து நொறுக்கி சேதப்படுத்திய வழக்குகளில் தொடர்புடைய சட்டகல்லூரி மாணவர் சிவனுபாண்டி குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
  • கடந்த மாதம் நெல்லை சட்டக்கல்லூரி மாணவர் நம்பிராஜன் என்பவர் நிலத்தகராறு தொடர்பாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
  • நேற்று வல்லநாடு இன்பேன்ட் ஜீசஸ் கல்லூரி முதல்வர் சுரேஷ் அதே கல்லூரி மாணவர்கள் 3 பேரால் கல்லூரிக்குள்ளேயே வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

பொதுவாக ஆயுதங்களுடன் மோதலில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தால் அவர்களது எதிர்காலம் பாழாகும் எனக்கருதி போலீசார் பிடியை இறுக்குவதில்லை. மாறாக சம்பந்தப்பட்ட மாணவர்களை தண்டிக்கும் பொறுப்பை அவர்கள் படிக்கும் பள்ளி மற்றும் கல்லூரி முதல்வர்களிடம் விடுகின்றனர்.

மாணவர்களின் எதிர்காலம், அவர்களது பெற்றோரின் நிலை, கல்வி நிறுவனங்களின் பெயருக்கு ஊறு  ஏற்படுவதை தவிர்க்கும் விதமாக தவறு செய்யும் மாணவர்களை சம்பந்தப்பட்ட பள்ளி, கல்லூரி முதல்வர்கள் சஸ்பெண்ட் செய்கின்றனர்.  ஆனால் இதை புரிந்து கொள்ள முயற்சிக்காமல் வன்முறை காட்சிகளை திரையிலும், ஊடகங்களிலும் நாள்தோறும் பார்க்கும் மாணவர்கள் தண்டனை கொடுத்த ஆசிரியர்களையே காவு வாங்குவது நேற்று நடந்த கொலை மூலம் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

Leave a Reply