shadow

கைப்பற்றப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை திருப்பி கொடுக்க முடியாது. சிங்கள அமைச்சரின் அடாவடி பேச்சு
fishermen
தமிழக மீனவர்களை அவ்வப்போது கைது செய்து வரும் சிங்கள படையினர், தமிழர்களின் படகுகளையும் அவ்வபோது கைப்பற்றி வரும் நிலையில் மீனவர்களை விடுவித்து வந்தாலும் கைப்பற்றப்பட்ட படகுகளை இலங்கை இதுவரை விடுவிக்கவில்லை. இதுகுறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் தமிழக மீனவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட படகுகளை விடுவிக்கும் பேச்சுக்கே இடமில்லை என இலங்கை அமைச்சர் ஒருவர் அடாவடியாக பேசியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இலங்கை மட்டக்களப்பு நகரில் நடைபெற்ற மீன் பண்ணை தொடக்க விழாவில்,  அந்நாட்டு மீன் வளத்துறை அமைச்சர் சமரவீரா கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது, ”இந்திய மீனவர்களால் இலங்கை உள்நாட்டின் மீன் வளம் அழிக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல், அவர்கள் சுற்று சூழலுக்கும் ஆபத்தான நிலையை ஏற்படுத்துகின்றனர். அவர்களுடைய அத்துமீறல் தொடர்ந்து நடந்து வருகிறது.

இது சம்பந்தமாக இந்தியாவில் இருந்து வந்திருந்த வெளியுறவுத்துறை அமைச்சரிடம் எடுத்து கூறியிருக்கிறோம். அவர் இது பற்றி பேச்சுவார்த்தைக்கு அழைத்து உள்ளார். பேச்சுவார்த்தைக்கு செல்ல தயாராக இருக்கிறோம். அதே நேரத்தில், இந்திய மீனவர்கள் அத்துமீறி நுழைவதை தடுக்க கடுமையான நடவடிக்கைகளை இலங்கை எடுக்கும்.

மேலும், எங்களுடைய இயற்கை வளத்தை பாதுகாப்பது மிக முக்கியமானது. இலங்கை கடல் பகுதிக்குள் அத்துமீறி வந்த தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்து வைக்கப்பட்டுள்ள படகுகளையும், மீன்பிடி சாதனங்களையும் ஒருபோதும் அவர்களிடம் திருப்பி கொடுக்கமாட்டோம்” என்று கூறினார்.

Leave a Reply