shadow

antibiotic left

தலைவலி, காய்ச்சல், ஜலதோஷம் என்று சிரமப்படும்போது, ‘இதை சாப்பிடு…’ என்று பிறர் பரிந்துரைக்கும் மாத்திரைகளை எடுத்துக் கொள்கிறவர்களுக்கு, இந்தச் செய்தி ஓர் எச்சரிக்கை!

கலிஃபோர்னியாவைச் சேர்ந்த 19 வயதுப் பெண் யாஸ்மீன் கேஸ்டாநாடா. நான்கு மாதக் குழந்தைக்குத் தாய். அமெரிக்காவின் கேளிக்கைகளுள் ஒன்றான ‘தேங்க்ஸ் கிவிங் பார்ட்டி’ ஒன்றுக்கு, சில நாட்களுக்கு முன்  சென்றார் யாஸ்மீன்.

அப்போது அவர் தனக்குத் தொண்டை கரகரப்பாக இருப்பதாகச் சொல்ல, அவர் நண்பர் அவருக்கு ஒரு ஆன்டிபயாடிக் மாத்திரை கொடுத்து சாப்பிடச் சொல்ல, யாஸ்மீனும் அதை உடனே விழுங்கினார்.

பார்ட்டி முடிந்து வீடு திரும்பியவருக்கு, மறுநாள் விடிந்தது கருப்பாக. ‘அம்மா தொண்டை எரியுது, வாய் எரியுது, கண் எரியுது’ என்று அலறிய யாஸ்மீனுக்கு, அதற்குப் பின் பேச்சும் வரவில்லை. சருமம் எங்கும் வெந்து சிவப்பாகி, ஓட்டை விழ ஆரம்பித்தது. தொடர்ந்த நிமிடங்களில் இது வீரியமடைந்தது. பதறி அவரை மருத்துவமனையில் சேர்க்க, இப்போது யாஸ்மீன் யுனிவர்சிட்டி ஆஃப் கலிஃபோர்னியா இர்வின் மெடிக்கல் சென்டரில் சிகிச்சை பெற்று வருகிறார்.

‘‘உங்கள் கண் முன் உங்கள் பெண்ணின் உடம்பு அங்கங்கு எரிந்து, பொத்தலாகிப் போவதைப் பார்க்க உங்க ளால் முடியுமா? அதை நான் அனுபவித்தேன். இப்போது வரை அவள் நாக்கில் ஒரு சொட்டு தண்ணீர்கூட படவில்லை. ‘வீட்டுக்குப் போய்விடலாம் அம்மா. என்னால் இதைத் தாங்க முடியவில்லை’ என்று அவள் கதறுவதைப் பார்க்கத் திராணியற்று இருக்கிறேன்!’’ என்று கண்ணீர் கசிகிறார் யாஸ்மீனின் அம்மா கரோனா.

யாஸ்மீனுக்கு வந்திருப்பது ‘ஸ்டீவன்ஸ் ஜான்ஸன் சிண்ட்ரோம்’ என்கிற மிகவும் அரிதான சரும நோய் என்கிறார்கள் மருத்துவர்கள். நாம் எடுத்துக் கொள்ளும் மருந்துகள் நம் உடலுக்கு ஒத்துக்கொள்ளாமல் போவதாலோ, அல்லது தொற்றுகள் காரணமாகவே ‘ஸ்டீவன்ஸ் ஜான்ஸன் சிண்ட்ரோம்’ ஏற்படுகிறது.

ஒருவேளை நீங்கள் எடுத்துக் கொள்ளும் மருந்துகளால் உங்கள் உடல் பாதிக்கப்பட்டால், அலர்ஜியானால், மோசமான விளைவுகளை தந்தால் அப்படிப்பட்ட மருந்துகளை வாழ்நாள் முழுக்க எடுத்துக் கொள்ளாதீர்கள். யாஸ்மீனுக்கு அவர் எடுத்துக் கொண்ட ஆண்டிபயாடிக் ஒத்துக்கொள்ளவில்லை என்பதாலேயே இந்தப் பிரச்னை ஏற்பட்டிருக்கிறது என்கிறார்கள் டாக்டர்கள்.

இதிலிருந்து அவர் மீண்டு வந்தாலும் ஆக்குபேஷனல் தெரபி, டெர்மடாலஜி, பிசியோதெரபி, நியூட்ரிஷன், தீப்புண் சிகிச்சை என்று பல சிகிச்சைகளை அவர் எடுத்துக் கொண்டாக வேண்டிய நிலையில் இருக்கிறார். உடம்பு முழுக்கக் கட்டுகளுடன் இருக்கும் அவரைப் பார்க்கவே பாவமாக இருக்கிறது.

‘‘ப்ளீஸ் யாரும் டாக்டர் அட்வைஸ் இல்லாமல் எந்த மருந்தையுமே, குறிப்பாக ஆன்டி பயாடிக் எடுத்துக் கொள்ளாதீர்கள். இதை, முடிந்தளவு மற்றவர்களுக்கும் எடுத்துச் சொல்லுங்கள்!’’ என்று கண்ணீர் மல்க கோரிக்கை வைக்கிறார், யாஸ்மீனின் அம்மா கரோனா.

Leave a Reply