shadow

அமெரிக்காவை மிரட்டி 200 கோடி டாலர்கள் பெற்றேன். சுப்பிரமணிய சாமி அதிர்ச்சி தகவல்
subramanian swamy
பரபரப்புக்கு பஞ்சமின்றி அவ்வப்போது அதிரடி தகவல்களை அள்ளி வீசும் வழக்கம் உடைய பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியசுவாமி சமீபத்தில் தெரிவித்துள்ள ஒரு கருத்து இந்தியாவை மட்டுமின்றி அமெரிக்காவையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்தியா கடுமையான பொருளாதாரச் சிக்கலில் இருந்தபோது அமெரிக்காவை மிரட்டி சுமார் பத்தாயிரம் கோடி ரூபாயை நாட்டுக்கு வாங்கித் தந்தேன் என்று அதிரடியாக சுப்பிரமணியசாமி கூறியுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கொச்சி நகரில் நேற்று நடைபெற்ற ‘பொறுப்பான முதலாளித்துவம்’ என்ற கருத்தரங்கில் சுப்பிரமணியசாமி பேசியதன் முழுவிபரம் பின்வருமாறு:

1991-ம் ஆண்டு முன்னாள் பிரதமர் சந்திரசேகர் தலைமையிலான ஆட்சி நடைபெற்றபோது, அதற்கு முந்தைய ஆட்சியாளர்களின் தவறான பொருளாதாரக் கொள்கையால் நமது நாடு கடுமையான நிதிநெருக்கடியை சந்திக்க நேர்ந்தது. அப்போது, மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை மந்திரியாக நான் பொறுப்பேற்றிருந்தேன்.

நாட்டின் பொருளாதாரச் சிக்கலை தீர்க்க என்ன செய்யலாம்? என்று பிரதமர் சந்திரசேகர் என்னிடம் ஆலோசனை கேட்டிருந்தார். ஈராக்குக்கு எதிரான அமெரிக்காவின் முதல்போர் நடைபெற்றுகொண்டிருந்த அவ்வேளையில் அதிர்ஷ்டவசமாக, அமெரிக்காவுக்கான தலைமைத்தூதர் ஒரு விவகாரம் தொடர்பாக என்னிடம் வந்தார். அப்போது குவைத் நாட்டை ஈராக் கைப்பற்றியிருந்தது.

உங்களுக்கு என்ன உதவி தேவை? என்று அவரிடம் நான் கேட்டேன். ஈராக்குக்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ள அமெரிக்க போர் விமானங்கள் பிலிப்பைன்ஸ் நாட்டிலுள்ள அமெரிக்க விமானப்படை தளத்தில் இருந்து இந்தியாவுக்கு வந்து பெட்ரோல் நிரப்பிச் செல்ல நீங்கள் அனுமதி பெற்றுத்தர வேண்டும். அதற்காக, இங்கு பெட்ரோல் நிரப்பவரும் வழக்கமான வெளிநாட்டு விமானங்கள் உங்களுக்கு அளிப்பதைவிட மூன்றுமடங்கு அதிகமான கட்டணத்தை வழங்க நாங்கள் தயாராக உள்ளோம் என அமெரிக்க தூதர் என்னிடம் தெரிவித்தார்.

அதற்கு நான், வெறும் வேர்கடலைப்பயிறு கொரிப்பதற்காக எங்கள் நாட்டு விமான நிலைய கட்டுப்பாட்டு சட்டங்களை நாங்கள் மாற்றிக்கொள்ள முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்து விட்டேன். உங்களுக்கு என்னத்தான் வேண்டும்? என்று அவர் திருப்பிக் கேட்டார்.

நாங்கள் பொருளாதார ரீதியில் திவால் அடையும் நிலையில் நிற்கிறோம். அதை தவிர்ப்பதற்கு உடனடியாக 200 கோடி டாலர்கள் தேவை. உங்களால் வாங்கித்தர முடிந்தால் அமெரிக்க போர் விமானங்கள் இந்தியாவுக்குள் வந்து பெட்ரோல் நிரப்பிச்செல்ல அனுமதி அளிக்கத் தயார் என்று நான் கூறினேன்.

அமெரிக்காவிடமிருந்து இந்த தொகையை எதிர்பார்க்கிறீர்களா? என அவர் கேட்டார்.

இல்லை, சர்வதேச நிதி முனையத்தில் இருந்து எவ்வித நிபந்தனையுமின்றி கடனாக அந்தத் தொகையை பெற்றுத்தர அமெரிக்கா உதவ வேண்டும் என நான் குறிப்பிட்டேன். சர்வதேச நிதி முனையத்தில் இருந்து நான் எப்படி இந்தியாவுக்கு பணம் வாங்கித்தர முடியும்? என்று அமெரிக்க தூதர் எதிர்கேள்வி கேட்டார்.

சர்வதேச நிதி முனையத்தில் அமெரிக்காவுக்கு 87 சதவீத ஓட்டுரிமை உண்டு, எனவே, உங்கள் நாட்டு போர்விமானங்கள் எங்கள் மண்ணில் தரையிறங்கும் உரிமை உங்களுக்கு கிடைக்க வேண்டுமானால், திங்கட்கிழமைக்குள் எனக்கு 200 கோடி டாலர்கள் கிடைத்தாக வேண்டும் என்று நான் பிடிவாதமாக கூறிவிட்டேன்.

இப்போதே வெள்ளிக்கிழமையாகி விட்டது. அமெரிக்காவில் இன்று வியாழக்கிழமை என்று அவர் யோசிக்க தொடங்கினார். ஆனால், அவர்கள் நமக்கு 200 கோடி டாலர்களை தந்தார்கள். பதிலுக்கு நாமும் அமெரிக்க போர் விமானங்கள் நம் நாட்டுக்குள் தரையிறங்கும் உரிமையை அவர்களுக்கு அளித்தோம். அதன்மூலம் நம் நாட்டில் அன்னிய விமானங்கள் தரையிறங்குவது தொடர்பான பழைய கொள்கையை நாம் மாற்றிக் கொண்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தன்னை சந்தித்து மேற்படி தொகையை ஏற்பாடு செய்து தந்த அமெரிக்க தூதரின் பெயரை சுப்பிரமணியசாமி குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply