ஏன் இத்தனை அவதூறு வழக்குகள்? தமிழக அரசு மீது காட்டமான சுப்ரீம் கோர்ட்
jaya vijaykanth
தமிழகத்தில் மட்டும் ஏன் எவ்வளவு அவதூறு வழக்குகள் தொடரப்படுகின்றது என சுப்ரீம் கோர்ட் நீதிபதி காட்டமாக விமர்சனம் செய்துள்ளது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக எதிர்கட்சித்தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா மற்றும் அவரது கட்சியின் 3 எம்.எல்.ஏக்கள் ஆகியோர் மீது தமிழக அரசு பல்வேறு  அவதூறு வழக்குகளை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளது. இந்த அவதூறு வழக்குகள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து விஜயகாந்த் சார்பில், வழக்கறிஞர் ஜி்.எஸ் மணி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

“அவதுாறு வழக்குகள் தொடர்பான சட்டப்பிரிவுகளை நீக்கக்கோரும் முந்தைய மனுக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், உடனடியாக  விஜயகாந்த் உள்ளிட்டோர் மீதான வழக்குகளை ரத்து செய்யமுடியாது என்றும் மற்ற மனுக்களின் மீதான விசாரணையின்போது இந்த மனுவும் விசாரிக்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்படும்” என சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அவதூறு வழக்குகள் குறித்து ஏற்கனவே கருத்து தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, “தமிழகத்தில் ஏன் இவ்வளவு அவதூறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன?” என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், “அரசின் செயல்பாடுகளை விமர்சிப்பதுதானே எதிர்க்கட்சித் தலைவரின் பணி. எதற்கெடுத்தாலும் அவதூறு வழக்கு தொடர்வதை பார்க்கும்போது அரசு எந்திரம் சரியாக செயல்படவில்லை என்பதையே காட்டுகிறது” என காட்டமாக கூறினர். பின்னர் நீதிபதிகள், விஜயகாந்த் மீதான அவதூறு வழக்குகள் குறித்து தமிழக அரசு இரண்டு வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டனர்.

 

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *