shadow

supreme courtஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது சட்டவிரோதமானது’ என்றும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும்படி சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 2010ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவையும் ரத்து செய்வதாகவும் நேற்று சுப்ரீம்கோர்ட் அதிரடி தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக மக்கள் தொகைப் பதிவாளர் சார்பில் கடந்த 2012ஆம் ஆண்டில் சுப்ரீம் கோர்ட்டில் பதிவு செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ரோஹின்டன் ஃபாலி நாரிமன், யு.யு. லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று தனது அதிரடி தீர்ப்பை அளித்தது. இந்த தீர்ப்பின் முழுவிபரங்கள் பின்வருமாறு:

மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடவடிக்கையில் எந்தெந்த விவரங்கள் பதிவு செய்யப்பட வேண்டும் என்ற கொள்கை முடிவின்படி 2000, ஜனவரி 13-இல் ஓர் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில், குடும்பத் தலைவர் ஆணா, பெண்ணா? அவர் தலித் வகுப்பினரா? அல்லது பழங்குடியின வகுப்பினரா? அல்லது வேறு வகுப்பினரா? என்பதை மட்டும் பதிவு செய்ய வேண்டும் என வரையறுக்கப்பட்டுள்ளது. எந்த ஜாதியை சேர்ந்தவர் என்ற விவரத்தைப் பதிவு செய்வது குறித்து எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை.

மேலும், 2010-இல் அரசு எடுத்த கொள்கை முடிவின்படி வெளியிடப்பட்ட மற்றொரு அரசாணையில் மேற்கண்ட விவரத்துடன், வீட்டில் வசிப்பவர்கள் விவரம், திருமண நிலை, குடிநீர் வசதி, குடியிருப்பில் உள்ள கழிப்பறை வசதிகள், கழிவுநீர் வசதிகள், சமையல் எரிவாயு, தொலைக்காட்சி, வானொலி, தொலைபேசி, கைப்பேசி, வாகனங்கள் போன்றவை தொடர்பான விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டது.

வரம்பு மீறிய உயர் நீதிமன்றம்: இதுதொடர்பான ஆவணங்களைச் சரியாக ஆராயாமல் சமூக நீதியை நிலைநாட்டுவதற்காக, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும்படி மக்கள்தொகை கணக்கெடுப்பு பதிவாளருக்கு 2010-இல் சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு, அதன் அதிகார வரம்பை மீறிய செயலாகும்.

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் நடவடிக்கை சட்டவிரோதமானதாகும். அரசின் கொள்கை முடிவுகள் சரியா, தவறா என்பது குறித்து நீதிமன்றங்கள் கருத்துக் கூறலாமே தவிர, அவற்றை மாற்றியமைக்கும் நடவடிக்கையில் ஈடுபடக் கூடாது.

இந்த வழக்கை உணர்வுப்பூர்வமாக அணுகியுள்ள சென்னை உயர் நீதிமன்றத்தின் நடவடிக்கையை சட்டம் அனுமதிக்காது. ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு ரத்து செய்யப்படுகிறது என்று நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

Leave a Reply