shadow

Corruption1ஊழல் வழக்குகளில் தண்டனை பெறும் அரசியல்வாதிகள் கீழ்கோர்ட்வழங்கும் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடியாத அளவுக்கு சட்டத் திருத்தம் வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் நீதிபதி கூறி உள்ளார்.

சென்னை ஐகோர்ட் வளாகத்தில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் செலமேஸ்வர், எப்.எம்.இப்ராகிம் கலிபுல்லா, ஐகோர்ட் தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த கருத்தரங்கில் பேசிய சுப்ரீம் கோர்ட் நீதிபதி  செலமேஸ்வர் ”குடியரசு தலைவர், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்பட அனைவரையும் தேர்வு செய்யப்பட வேண்டிய வழிமுறைகள் என்று அரசியல் அமைப்பு சட்டம் கூறுகிறது. ஆனால், பொது தேர்தல்களில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவது உண்மைதான். தேர்தல்களின் மூலம் பதவிகளுக்கு வரும் நபர்கள் நேர்மையானவர்களாக இருக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால், இதுபோன்ற நபர்கள் ஊழல் வழக்குகளில் சிக்கும்போது, தண்டனை வழங்கும் சட்டங்கள் போதுமானதாக இல்லை.

இதுபோன்ற வழக்குகளில், கீழ் நீதீமன்றங்கள் வழங்கும் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடுகள் செய்ய வழிகள் உள்ளன. இதனால், தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகள் தேர்தலில் போட்டியிடலாம் என்ற விதி முன்பு இருந்தது. இந்த விதியை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து, தண்டனை பெற்றவர்கள், மேல்முறையீடு செய்தாலும் தேர்தலில் போட்டியிட முடியாது என்று தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து நாட்டில் உள்ள அனைத்து அரசியல்வாதிகளும் ஒன்று திரண்டனர். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, அரசியல் சாசன சட்டத்தின்படி சரியானதா? இல்லையா? என்பதில் இருவேறு கருத்துகள் எழலாம். ஆனால் பொதுமக்களின் பார்வையில், தாம் தேர்வு செய்யும் நபர்கள் நேர்மையானவர்களாக, மக்களைப் பற்றியே சிந்திக்கும் நபர்களாக இருக்க வேண்டும். ஊழல் உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடக்கூடாது என்று நினைக்கின்றனர். மக்களின் இந்த எண்ணத்தை எப்படி சட்டமாக மாற்ற முடியும்?

கிரிமினல் வழக்கில் அரசியல் தலைவர்கள் யாருக்காவது தண்டனை விதிக்கப்பட்டால், அவரை ஜாமீனில் வெளியில் கொண்டு வர அனைத்து நீதிமன்றங்களிலும் மிகப்பெரிய அளவில் முயற்சிகள் செய்யப்படுகிறது. அதனால், உயர் பதவிகளை வகிப்பவர்கள் ஊழலில் ஈடுபட்டால், அந்த வழக்கை பிரத்யேக முறையில் விசாரிக்கும் விதமாக சட்டங்களை இயற்ற வேண்டும்.

அப்படிப்பட்ட ஊழல் வழக்குகளில் தண்டனை பெற்றவர்கள், ஒரேயொரு மேல்முறையீடு செய்ய வாய்ப்பு வழங்க வேண்டும். அல்லது மேல்முறையீடே செய்ய முடியாத வகையில் பல நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து தீர்ப்பு வழங்கும் விதமாக சட்டங்களை திருத்தம் செய்ய வேண்டும்.

அமெரிக்காவின் 3 முன்னாள் மேயர்கள், ஒரு கவர்னர் ஆகியோர் பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாக நான் அங்கு சென்றபோது தெரிந்து கொண்டேன். அங்கு முதிர்ச்சியடைந்த ஜனநாயகம் உள்ளது. அதுபோன்ற ஒரு முதிர்ச்சியான ஜனநாயகம் நம் நாட்டில் இல்லை.

அதேபோல தேர்தல் தொடர்பான வழக்குகள் விசாரணை முடிவதற்கு 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகி விடுகிறது. இதனால், அந்த வழக்கில் தொடர்புடையவர் தன் பதவி காலத்தை முடித்து விடுகிறார். இதனால், தேர்தல் வழக்குகளை விரைவாக விசாரித்து முடிக்க அனைத்து மாநில உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

Leave a Reply