ராஜ்தானி, சதாப்தி மற்றும் துரந்தோ போன்ற அதிவேக ரயில்களில் மீண்டும் கட்டணம் உயர்த்தப்படுகிறது. 17 ஆம் தேதி முதல் இந்த ரயில்களில் ரூ.25 முதல் 50 ரூபாய் வரை கட்டணம் அதிகரிக்கப்படுகிறது.

பயணிகள் ரயில் கட்டணம் கடந்த 7 ஆம் தேதி முதல் 2 சதவீதம் அதிகரிக்கப்பட்டது. இந்த நிலையில், அதிவேக ரயில்களான ராஜ்தானி, சதாப்தி மற்றும் துரந்தோ ரெயில்களில், வருகிற 17 ஆம் தேதி முதல் கட்டணத்தை அதிகரிக்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளது.

இந்த ரயில்களில் வழங்கப்படும் உணவுக்கான விலை உயர்த்தப்பட இருப்பதால், பயணிகள் கட்டணம் சராசரியாக ரூ.25 முதல் ரூ.50 வரை உயரும் என்று ரயில்வே அமைச்சக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த ரயில்களில் கடந்த 14 ஆண்டுகளாக உணவுக்கான கட்டணம் உயர்த்தப்படவில்லை. இந்த ரயில்களில் ஆண்டுக்கு ரூ.3.3 கோடி மதிப்புள்ள உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

ரயில்வே அமைச்சக கட்டண உயர்வு முடிவின்படி, இந்த ரயில்களில் ஏ.சி.-2, ஏ.சி.-3 மற்றும் சேர்கார் பயணிகளுக்கு கட்டண உயர்வு ரூ.25 வரை இருக்கும். மேற்கண்ட பிரிவுகளில்தான் இந்த ரயில் பயணிகளில் 90 சதவீதம் பேர் பயணித்து வருகிறார்கள்.
ஏ.சி.மற்றும் உயர்வகுப்பு (எக்சிகியூட்டிவ்), துரந்தோவில் தூங்கும் வசதி பெட்டி பயணிகளுக்கு, இந்த கட்டண உயர்வு ரூ.30 முதல் 50 ரூபாய் வரை இருக்கும். ஏற்கனவே முன்பதிவு செய்த பயணிகள், கூடுதல் கட்டண உயர்வை ரயில் பயணத்தின்போது டிக்கெட் பரிசோதகர்களிடம் செலுத்தலாம்.

Leave a Reply